காமெடி நடிகரை கட்டிப்பிடித்து பாராட்டிய மம்முட்டி..!
01 டிச,2016 - 14:53 IST

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தில் ஹீரோவின் நண்பனாக ஹீரோவுக்கு சமமாக படம் முழுவதும் வந்துபோகின்ற காமெடி கேரக்டரில் நடித்திருந்தவர் தர்மராஜன் போல்காட்டி.. இவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்புக்கு நிச்சயம் உத்திரவாதம் தந்திருக்கிறார். குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் தனது நண்பனான கதாநாயகனுக்கு போன் செய்து, தனக்கு பெண்கள் திட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸை படித்துக்காட்டி அர்த்தம் கேட்பதும், அந்தப்பெண் யாரென ஹீரோ கேட்பதற்குள் படக்கென போனை கட்பண்ணிவிடுவதும் சரியான தமாஷ்..
இந்தப்படத்தை மெகாஸ்டார் மம்முட்டியும் பார்த்து ரசித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் திலீப் காவ்யா மாதவன் திருமணத்திற்கு மம்முட்டியும் வந்திருந்தார் அல்லவா..? அப்போது அங்கு வந்திருந்த தர்மராஜனை பார்த்ததும் அவரை அருகில் வரச்சொல்லி கட்டிப்பிடித்து பாராட்டினாராம் மம்முட்டி. தனது அருகில் இருந்தவர்களிடம் “இந்தப்பையன் என்னமா பண்ணியிருக்கிறான்” என சிலாகித்தும் கூறினாராம். மம்முட்டியிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைக்குமென எதிர்பார்த்திராத தர்மராஜன், அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு இரண்டு நாள் ஆனதாம்.
0 comments:
Post a Comment