சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ?
20 பிப்,2017 - 17:34 IST

சினிமாவைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமும், வாய்ப்பும் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. தமிழில் ஐந்து வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். பெரிய ஹீரோக்களுடன் நடிக்க முடியாமல் போனதால் அவரைத் தமிழில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன்பின் தெலுங்கிற்குச் சென்று அங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். அப்புறமென்ன வேண்டாமென்று ஒதுக்கிய தமிழ் சினிமா அவரை மீண்டும் இரு கரம் கூப்பி வரவைத்துக் கொண்டிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் நாயகியாக தமிழுக்கு மீண்டும் வந்துவிட்டார் ரகுல் ப்ரீத் சிங். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அடுத்து கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ள படத்திலும் ரகுலை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
ஏற்கெனவே 'துப்பறிவாளன்' படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் ரகுல். ஆனால், அந்தப் படம் ஆரம்பமாக தாமதமானதால் அதிலிருந்து விலகிவிட்டார். இப்போது சூர்யா ஜோடியாக செல்வராகவன் படம் என்பதால் நடிக்க சம்மதிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment