Tuesday, April 18, 2017

இதை செய்தால் மும்பை நகரம் உலகதரத்திற்கு உயரும் : சோனாக்ஷி சின்ஹா


இதை செய்தால் மும்பை நகரம் உலகதரத்திற்கு உயரும் : சோனாக்ஷி சின்ஹா



18 ஏப்,2017 - 12:18 IST






எழுத்தின் அளவு:








சோனாக்ஷி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நூர். சுனில் சிப்பி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சோனாக்ஷி பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் பணிகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த சோனாக்ஷி, நமது தினமலர் இணையதளத்திற்காக அளித்த பேட்டியின்போது, நூர் படம் பற்றியும், தனது சினிமா பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த பேட்டி வருமாறு...

நூர் கதை என்ன.?

படத்தின் தலைப்பான நூர் என்ற கேரக்டரிலேயே நான் நடித்துள்ளேன். வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமல், செய்யும் வேலையில் சந்தோஷம் இல்லாமல் ஏதோ காலம் போன போக்கில் வாழ்ந்து வருபவர். வேலையில் போதிய அனுபவம் இல்லாததால் அவரால் தனியாக எதுவும் செய்ய முடியாததால் எதற்கெடுத்தாலும் கோபப்படும் கேரக்டர். அப்படிப்பட்ட நூரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நிகழ்கிறது, அதன்பின்னர் அவரது வாழ்க்கை பாதை வேறு விதமாக பயணிக்கிறது, அது என்ன என்பது தான் படத்தின் கதை.

படத்தில் பத்திரிகையாளராக நடித்த அனுபவம், நீங்கள் நிஜ பத்திரிகையாளராக இருந்தால் யாரை பேட்டி எடுக்க விரும்புவீர்கள்..?

நான் பேட்டி எடுக்க விரும்பும் ஒரே ஒரு நபர் என்றால் அது இப்படத்தின் இயக்குநரான சுனில் சிப்பி தான். அவரிடம், எப்படி அதிகமாக பேச வேண்டும் என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் தான் கேட்க விரும்புகிறேன்.

பெண்களை மையப்படுத்தி அதிக படங்கள் வெளிவருகின்றன, இதுப்பற்றி உங்கள் பார்வை.?

தயவு செய்து பெண்களை மையப்படுத்திய படம் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ஒரு ஹீரோவின் படம் ரிலீஸாகிறது என்றால் அப்போது ஆண்களை மையப்படுத்திய படம் என்று சொல்வீர்களா..?. இது ஆரம்பம் தான். இனி பாருங்கள், மாதத்திற்கு மூன்று படங்கள் இது போன்று ரிலீஸாகும், அப்போது இந்த கேள்வியை கேட்கமாட்டீர்கள். பெண்களுக்கான படங்கள் வருங்காலத்தில் சிறப்பாக உள்ளது.

நீங்கள் எப்போது ஹாலிவுட்டில் நடிக்க போகிறீர்கள்..?

நான் நடிக்க தயாராக தான் உள்ளேன். ஹாலிவுட் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடிக்க ஆர்வமாய் உள்ளேன். என்னைப்பொறுத்தமட்டில் ஒரே ஒரு நிபந்தனை தான், நல்ல வலுவான கதை அமைய வேண்டும்.

மும்பை நகரத்தில் எது மோசம் என்று நினைக்கிறீர்கள்..?

மும்பை நகரத்தில் எல்லா விஷயங்களும் எனக்கு பிடிக்கும். ஆனால் நகரில் போக்குவரத்து பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதுமட்டுல்ல உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். சாலையில் எங்கும் பள்ளமாக தான் காணப்படுகின்றன. ஆகையால் சாலையையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். அப்படி செய்தால், உலகளவில் மும்பை நகரம் சிறந்த நகரமாக இருக்கும்.

இவ்வாறு சோனாக்ஷி சின்ஹா கூறினார்.


0 comments:

Post a Comment