குடிதண்ணீர் சீசனுக்கு ஏற்ற படம்
18 ஏப்,2017 - 11:00 IST

மார்க்ஸ் என்ற புதுமுகம் இயக்கி உள்ள படம் நகர்வலம். எம்.நடராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பவன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் தென்றல் இசை அமைத்துள்ளார். யூகன் பாலாஜி, தீக்ஷிதா மாணிக்கம் (அறிமுகம்), யோகிபாபு, பால சரவணன், நமோ நாராயணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் மார்க்ஸ் கூறியிருப்பதாவது:
சென்னை போன்ற பெருநகரங்களின் உணவுத் தேவைக்கு ஈடாக இருப்பது குடிநீர் தேவை. கோடை காலங்களில் அதுவே அவர்களுக்கு உணவை விட முக்கியமானதாக மாறிவிடும். குடிநீர் லாரிகள் கோவிலாகவும், அதன் டிரைவர் தெய்வமாகவும் தெரிய ஆரம்பிப்பார். குடிநீரை வைத்து ஒரு பெரிய அரசியலே நடக்கும். படத்தின் ஹீரோ தண்ணீர் லாரி டிரைவர். அவர் செல்லும் ஏரியாக்களில் எல்லாம் அவர் செல்லப்பிள்ளை. பல ஏரியாக்களின் லாப நஷ்டங்களை அறிந்தவர்.
அப்படி இருக்கிற ஹீரோவுக்கும் அடுக்குமாடி கலாச்சாரத்தில் வாழும் ஹீரோயினுக்கும் ஏற்படும் காதலும், அதனால் வரும் பிரச்னையும், தண்ணீர் அரசியலுக்குள் இழுக்கப்பட்டு அதனை எதிர்த்து போராடுவதும் தான் கதை. காதல், போராட்டம் இரண்டிலும் அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதை உண்மைக்கு நெருக்கமாக இருந்து சொல்கிறோம். ஒவ்வொரு தண்ணீர் லாரிக்கும், ஒவ்வொரு தண்ணீர் குடத்துக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அதில் ஒன்றையே படமாக்கியிருக்கிறோம். என்கிறார் மார்க்ஸ்.
0 comments:
Post a Comment