இனி பொற்காலம் தான் - தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் பேச்சு
02 ஏப்,2017 - 19:57 IST

நடந்து முடிந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார். விஷால் 478 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 335 ஓட்டுகளும், கேயார் 224 ஓட்டுகளும் பெற்று தோல்வியடைந்தனர். இனி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பொற்காலம் தான் என விஷால் கூறினார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. தற்போதைய நிர்வாக பொறுப்பில் இருக்கும் தாணு அணியினர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததால் அவரை எதிர்த்து விஷால் அணியினர் களமிறங்கினர். விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்று அணிகளாக போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் அணி, ஜி.சேகரன் அணி மற்றும் டி.சிவா அணியினர் ஓரணியில் இணைந்தனர். இதனால் விஷால், ராதாகிருஷ்ணன் மற்றும் கேயார் தலைமையிலான மூன்று அணிகள் தேர்தல் களத்தில் நின்றனர்.
தலைவர், துணைத்தலைவர் , செயலாளர் ,பொருளாளர் உள்ளிட்ட 27 பதவிகளுக்கான தேர்தல், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடந்தது. ரஜினி, கமல், டி.ராஜேந்தர், ராஜ்கிரண், ஏஜிஎஸ்., கல்பாத்தி அகோரம் உள்ளிட்ட பலர் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். எந்த பிரச்னையும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 1211 ஓட்டுகளில், 1059 ஓட்டுகள் பதிவாகின.
விஷால் வெற்றி : தொடர்ந்து மாலை 5 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதலில் தலைவர் பதவிக்கான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் விஷால் 478 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 335 ஓட்டுகளும், கேயார் 224 ஓட்டுகளும் பெற்று தோல்வியடைந்தனர். தொடர்ந்து மற்ற பதவிகளுக்கான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதிலும் விஷால் அணியில் போட்டியிட்டவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.
பொருளாளர் எஸ்ஆர்.பிரபு : தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 294 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இனி பொற்காலம் தான் : தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்... ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றி, மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அடுத்த இரண்டாண்டுகள் பொற்காலம் தான், தமிழ் சினிமாவை நிச்சயம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம். முதல்கட்டமாக விவசாயிகளுக்கும், சில தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையும் நிறைவேற்ற பாடுவேன் என்றார்.
0 comments:
Post a Comment