விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும் என நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார்.
திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேற்று திருவண்ணாமலையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
‘கண்ணெதிரே காணும் தெய்வம் அம்மா. அம்மாவிற்கு அடுத்து எனது தெய்வம் ரசிகர்களாகிய நீங்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுடன் நானும் இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கான வெற்றி மாணவர்களின் வெற்றி. ஜல்லிக்கட்டுக்கு அடுத்து லாரன்ஸ் காணாமல் போய் விட்டார் என்று கூறுகிறார்கள்.
ஆனால் நான் தற்போது விவசாயிகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டிருக்கிறேன். என்னிடம் தமிழக விவசாய சங்க தலைவர் உதவி கேட்டார். அது யாருக்காக என்றால் கடன் வாங்கி பயிரிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் குடும்பத்திற்கு. அப்போது நானும் என்னால் முடிந்த உதவியை செய்தேன்.
டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்கள் தண்ணீருக்காக போராடுகிறார்கள். தண்ணீர் நமக்கு தேவைப்படாதா… எனவே அவர்கள் நமக்கும் சேர்த்து தான் போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டில் அரசியல் இல்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதில் தான் அரசியல் உள்ளது. அதை நான் ஜல்லிக்கட்டுக்கான போராட்ட களத்தில் கண்டேன்.
‘விவசாயத்தை காப்போம் சொல்லாதே செய்’ என்ற புதிய திட்டம் விரைவில் கொண்டு வரப்போகிறேன். இந்த திட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆதரவு தர வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
ரசிகன் தான் எனது முதலாளி. நமது விவசாயிகளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இந்த அரசு செய்யுதோ இல்லையோ என்னால் முடிந்த உதவியை நான் செய்வேன். நீங்களும் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் என்னை பலர் மக்கள் ‘சூப்பர்ஸ்டார்’ என்று கூறுகிறார்கள். எப்போதும் ஒரே ‘சூப்பர் ஸ்டார்’ என் தலைவர் (ரஜினிகாந்த்).
அரசுக்கு எனது கோரிக்கை எதுவென்றால் போராடும் விவசாயிகளின் பல கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கையான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் விரைவில் மெரினாவில் புரட்சி வெடிக்கும். இளைஞர்கள் அதிலும் வெற்றி காண்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
0 comments:
Post a Comment