தாசரியின் உயிருக்கு உலைவைத்த எடை குறைப்பு சிகிச்சை..!
08 ஜூன், 2017 - 17:00 IST

சில நாட்களுக்கு முன் தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான இயக்குனரும் 150 படங்களை இயக்கிய சாதனைக்கு சொந்தக்காரருமான தாசரி நாராயணராவ் காலமானர். இவருக்கு வயது 75. இந்த வயதிலும் படம் இயக்கும் சுறுசுறுப்புடன் வளைய வந்துகொண்டிருந்த தாசரி நாராயணராவ் இப்படி திடீரென மரணத்தை தழுவ, அவர் கடந்த ஒருவருடமாக எடுத்துவந்த எடைக்குறைப்பு அறுவை சிகிச்சையும் ஒருகட்டத்தில் அது பெயிலியர் ஆனதும் தான் காரணம் என அவரது மகள் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் முதன்முதலாக எடையை குறைப்பதற்காக பலூன் சர்ஜரி என்கிற அறுவை சிகிச்சை செய்துகொண்டார் தாசரி நாராயணராவ். அது வெற்றிகரமாக முடிந்து சில கிலோக்கள் எடை குறைந்தது. அதனால் இன்னும் கொஞ்சம் எடையை குறைக்க மீண்டும் அதேபோல் ஒரு சிகிச்சையை சில மாதங்கள் கழித்து மேற்கொண்டார் தாசரி. ஆனால் இந்தமுறை அறுவை சிகிச்சை செய்தது வேறு ஒரு டாக்டர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே ரொம்பவே அசௌகரியமாக தாசரி உணர்ந்தார். குறிப்பாக திட உணவு எதுவும் உண்ண முடியாமல் ட்யூப் மூலமாக திரவ உணவு மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து டாக்டர்கள் பரிசோதித்ததில் இரண்டாவது சிகிச்சை பெயிலியர் ஆன விஷயம் தெரியவந்தது. இதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிசைக்கு தயாரான தாசரி, இந்த சிகிச்சையில் கடந்த சிகிச்சையால் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து, வழக்கமான உணவுகளை சாப்பிடும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என நினைத்துள்ளார். ஆனால் மீண்டும் சமீபத்தில் அவருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோல்வியடையவே, மருத்துவர்களால் அந்த மாபெரும் கலைஞனின் உயிரை காப்பாற்ற முடியாமலேயே போய்விட்டது என தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment