போனவாரம் வெளியாகி ஹிட்டான மம்முட்டி படம் 'விரைவில்' டிவியிலா..?
17 அக்,2016 - 16:25 IST

இந்த சமூக வலைதள விஷமிகள் எங்கிருந்துதான் காளான்போல முளைக்கிறார்களோ தெரியவில்லை, திரையுலகினருக்கு ஏதாவது ஒருவகையில் தங்களால் முடிந்த தொந்தரவை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்.. அந்தவகையில் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவி வரும் புகைப்படம் ஒன்று மலையாள தயாரிப்பாளர் ஒருவரின் தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கிறது.. அவர் வேறு யாருமல்ல கடந்தவாரம் மம்முட்டி நடிப்பில் வெளியான 'தோப்பில் ஜோப்பன்' படத்தை தயாரித்தவர் தான்..
இந்தப்படத்திற்கு போட்டியாக வெளியான மோகன்லாலின் 'புலி முருகன்' படம் பட்டையை கிளப்பிகொண்டு இருந்தாலும், இந்தப்படமும் வசூலில் சோடை போகாமல், தியேட்டர்களில் மக்கள் கூட்டத்துடன் தான் காணப்பட்டு வருகிறது.. இந்தநிலையில் தான், இந்தப்படம் சூர்யா டிவியில் விரைவில் வெளியாகப்போகிறது என்கிற விளம்பரம் ஒன்றை டிவி ஸ்கிரீன்ஷாட் போல உருவாக்கி சோஷியல் மீடியாவில் பரவவிட்டுள்ளார்கள்..
ரசிகர்கள் இதை உண்மையென்று நம்ப ஆரம்பித்தால், சரி, அதுதான் டிவியில் வரப்போகிறதே பார்த்துக்கொள்வோம் என நினைக்க மாட்டார்களா..? அப்படி நினைத்தால் படத்தின் வசூல் என்னாவது..? இதனால் அதிர்ச்சியான தயாரிப்பாளர் “இன்னும் சாட்டிலைட் ரைட்ஸ் எந்த சேனலுக்கு கொடுப்பது என்கிற பேச்சுவார்த்தையை கூட நாங்கள் ஆரம்பிக்கவில்லை.. இந்த விளம்பரம் போலியானது.. இதை யாரும் நம்பவேண்டாம்” என விளக்கம் அளித்துள்ளதோடு, இந்த தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் புகாரும் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment