ஹீரோவானார் மானாட மயிலாட வசந்த்
01 மார்,2017 - 11:50 IST

கலைஞர் டி.வியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்று டைட்டில் வென்றவர் வசந்த். அந்த நிகழ்ச்சி நடந்தபோது மிகத் திறமையாக ஆடி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே வைத்திருந்தார். அப்போது நடுவர்கள் உங்கள் லட்சியம் என்ன என்று கேட்டபோது "சினிமா நடிகர் ஆகவேண்டும்" என்று சொன்னார். இப்போது, நிஜமாகவே சினிமா நடிகராகிவிட்டார். மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர் கலா மாஸ்டரின் சிபாரிசில் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்கி உள்ள யாதுமாகி நின்றாய் படத்தின் ஹீரோ வசந்த் தான்.
இதுபற்றி அவர் கூறியதாவது... ‛‛நடிகன் ஆக வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் கனவு. அதற்காகத்தான் நான் நடனம் கற்றேன். ஒரு அறிமுகம் வேண்டும் என்பதற்காகத்தான் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அது வெற்றி வரை கொண்டு வந்தது. நல்ல புகழ் கிடைத்தது ஆனால் நான் எதிர்பார்த்த சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சோர்ந்து இருந்தபோதுதான் கலா மாஸ்டர் இந்தப் படத்தின் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்.
படத்தில் நடன கலைஞர் வேடம் என்பதால் என்னை தேர்வு செய்தார்கள். காயத்ரி ரகுராம் ஜோடியாக நடித்துள்ளேன். படத்தில் எனது நடனம் பேசப்படுவதாக இருக்கும். நடனம் ஈசியாக ஆடிவிட்டேன். நடிப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டேன். காயத்ரி மேடம் எனக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்கள். ஒரு நடன பாடலை 5 மணி நேரத்தில் எடுத்தோம். இந்தப் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். என்கிறார் வசந்த்.
0 comments:
Post a Comment