இன்னும் சில மாதங்களில் 'மாரி 2' ஆரம்பம்
10 ஜூன், 2017 - 17:32 IST

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்த படம் 'மாரி'. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தனுஷ் நடித்த படங்களில் இந்தப் படத்திற்கனெ ஒரு தனி அடையாளம் உண்டு. படத்தின் பாடல்களும், தனுஷின் நடிப்பும் இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அந்தப் படம் வெளிவந்த போதே படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் எண்ணம் உள்ளது என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் பாலாஜி மோகனும் முழு ஸ்கிரிப்ட்டை தனுஷ் வசம் ஒப்படைத்தார்.
தனுஷ், அமலா பால் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தனுஷ் தற்போது ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் 'மாரி 2' படத்தில் நடிக்க உள்ளார். இது பற்றிய தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் இன்று வெளியிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் 'மாரி 2' படம் ஆரம்பம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திலாவது அனிருத் இணைவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 'மாரி' படத்தின் வரவேற்புக்கு அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் மிக முக்கிய காரணம். ஆனால், தனுஷ் தற்போது ஷான் ரோல்டனுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் 'மாரி 2' ஆரம்பமாக உள்ளதால், தனுஷை நாயகனாக நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போவதாகச் சொல்லப்பட்ட படம் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment