Wednesday, July 12, 2017

என்னை புரிந்து கொண்ட நல்ல மனிதர் பாலச்சந்தர் : பாரதிராஜா நெகிழ்ச்சி


என்னை புரிந்து கொண்ட நல்ல மனிதர் பாலச்சந்தர் : பாரதிராஜா நெகிழ்ச்சி



12 ஜூலை, 2017 - 11:07 IST






எழுத்தின் அளவு:






K.Balachander-understand-me-says-Bharathiraja


இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த கிராமத்தில் கவிஞர் வைரமுத்து அவரது சிலையை திறந்து வைத்தார். அதே நாளில் சென்னை ஏவிஎம் திரையரங்கில் கே.பாலச்சந்தரிடம் பணியாற்றிய தொழில்நுட் கலைஞர்கள் இணைந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாரதிராஜாவும், எஸ்.பி.முத்துராமனும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர் பாரதிராஜா பேசியதாவது:

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பாலசந்தர் இயக்கிய “நீர்க்குமிழி” படம் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிரமை இன்றும் என்னால் மறக்க முடியாது. நான் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தேன். அப்போது ஒரு நாடகத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். அந்த நாடகத்திற்கு கே.பாலசந்தர் தலைமை தாங்கினால் சரியாக இருக்கும் என்று எண்ணிய நான் அவரது வீட்டிற்கு சென்று, என் நாடகத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்று அழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. அப்போது என் கனவே உடைந்து போனது.

அதன் பிறகு ”பதினாறு வயதினிலே” படத்தை முடித்து விட்டு பாலசந்தரை அழைத்தேன். அவரும் படம் பார்க்க வந்தார். படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயத்திலேயே இருந்தேன். படம் முடிந்து வெளியே வந்த அவர் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். ஆனால் அடுத்த நாள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

இதுவரையில் இந்த மாதியான படம் பார்த்ததே இல்லை. ஒரு அற்புதமான படத்தை இயக்கி இருக்கிறாய் என வாழ்த்தி இருந்தார். தமிழ்நாடே பேசப்படுகின்ற ஒரு இயக்குனர் என்னை வாழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.

அவரது கடைசி காலகட்டத்தில் என்னை சந்தித்தபோது அவர் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததை மறக்க முடியாது. உனக்கு ஏதாவது வந்தால் நான் உன்னை தூக்குவேன். அதேபோல எனக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் நீ வந்து என்னை தூக்க வேண்டும் என்றார். என்னை புரிந்துக் கொண்ட ஒரு நல்ல மனிதர். அவர் இறக்கும்போது நான் சென்னையில் இல்லை. சிலோனில் இருந்தேன். அவர் இறந்த செய்தியைக் கேட்டதும், சென்னைக்கு வந்து கடைசி நேரத்தில் அவரை தூக்கிச் சென்றேன். அவருக்கு உண்டான மரியாதையை செய்து விட்டேன் என்ற திருப்தி இருக்கிறது.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

விழாவில் நடிகர்கள் ராஜேஷ், பூவிலங்கு மோகன், டி.பி.கஜேந்திரன், யூகிசேது மற்றும் நடிகை லலிதகுமாரி,நடன இயக்குனர் கலா, பெப்சி முன்னாள் தலைவர் இயக்குனர் மோகன்காந்திராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை. இயக்குனர் கவிதாலயா பாபு தன் சக கலைஞர்களுடன் இணைந்து செய்திருந்தார்.


0 comments:

Post a Comment