'நான் ஆணையிட்டால்' - சென்சார் அனுமதி பெற்ற டிரைலரா ?
12 ஜூலை, 2017 - 11:45 IST

ராணா டகுபட்டி, காஜல் அகர்வால், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க தேஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'நேனே ராஜா நேனே மந்திரி'. இந்தப் படம் தமிழில் 'நான் ஆணையிட்டால்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் சென்சார் தணிக்கை பெற்றதா, பெறாததா என்பது தெரியவில்லை. ஆனால், டிரைலரின் 50வது வினாடியில் ஒரு 'கெட்ட' வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதிலும் அந்த வார்த்தை 'சிஎம் சீட்' என்பதுடன் சேர்ந்து வருகிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவி என்பது எப்படிப்பட்ட பெருமைமிக்க ஒன்று என்பது படத்திற்கு வசனம் எழுதியிருப்பவருக்குத் தெரியாதா அல்லது படத்தை இயக்கியவருக்குத் தெரியாதா?. மேலும் படத்தை தயாரித்துள்ளது 50 வருட பாரம்பரியம் மிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம்.
சரி, தமிழில்தான் இப்படி ஒரு வசனம் இடம் பெற்றுள்ளதா அல்லது தெலுங்கிலும் உள்ளதா என தெலுங்கு டிரைலரையும் பார்த்தால் அதிலும் அப்படியேதான் உள்ளது. தெலுங்கு டிரைலரில் அதற்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டில் வேறு போடுகிறார்கள்.
பெரிய தயாரிப்பு நிறுவனங்களை சென்சார் அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்களோ என்ற கேள்வியை இந்த டிரைலர் கண்டிப்பாக எழுப்பும். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
0 comments:
Post a Comment