சமூகசீர்கேடு : கமல் உள்ளிட்ட பிக்பாஸ் குழுவை கைது செய்ய கோரி புகார்
12 ஜூலை, 2017 - 14:13 IST

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சமூகத்திற்கு கேடானது. ஆகவே, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது....
இந்திய மக்கள், மானமே முக்கியம் எனும் கொள்கை உடையவர்கள். இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் சினிமா மற்றும் டிவி., நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள ஆண்களும், பெண்களும் ஆபசமாக பேசி, நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவி பார்க்கையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும்.
உயிரை விட மேலாக கருதப்படும் தமிழர்களின் தமிழ்தாய் வாழ்த்தை கூட கிண்டல் செய்துள்ளனர். இது 7 கோடி தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே இந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்திரி ரகுராம், ஆர்த்தி, சினேகன், ஓவியா, ஷக்தி, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட 15 பேரையும் கைது செய்ய வேண்டும். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் உடனடியாக தடை செய்து தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment