Wednesday, January 4, 2017

சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் 2 கதாநாயகிகள்


தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் 1950, 60 மற்றும் 70-களில் 310-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, சினிமா படமாக தயாராகிறது.


பாசமலர், தேவதாஸ், திருவிளையாடல், குறவஞ்சி, கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, கர்ணன், பரிசு, களத்தூர் கண்ணம்மா என்று சாவித்திரி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடின.


கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கியவர், முதன் முதலாக சென்னையில் நீச்சல் குளத்துடன் ஆடம்பர பங்களா கட்டி வாழ்ந்த நடிகை என்ற பெருமைகள் சாவித்திரிக்கு உண்டு.


கடைசி காலத்தில் சொந்த படம் எடுத்து நஷ்டமடைந்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களையெல்லாம் இழந்து, ஏழ்மை நிலையில் நோய்வாய்ப்பட்டு பல மாதங்கள் கோமா நிலையில் இருந்து உணர்வு திரும்பாமலேயே பரிதாபமாக இறந்தார்.


சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு டைரக்டர் நாக அஸ்வின் படமாக எடுக்கிறார். இதற்கான திரைக்கதையை பழைய நடிகர்-நடிகைககள் மற்றும் சாவித்திரியின் குடும்பத்தினரை சந்தித்து பேசி தயார் செய்து இருக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்த படம் தயாராகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடந்து வருகிறது.


2 கதாநாயகிகள் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நித்யா மேனன், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


இவர்களில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்பது ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் கதாபாத்திரங்களில் நடிக்கவும் நடிகர்கள் தேர்வு நடக்கிறது.


0 comments:

Post a Comment