ஆல்பமாக வெளியாகும் யுவனின் பின்னணி இசை
28 ஜன,2017 - 17:50 IST
இயக்குனர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் துள்ளுவதோ இளமை படம் தொடங்கி, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வெற்றிக்கூட்டணியாக விளங்கினார்கள். யுவன்சங்கர்ராஜா இசையமைத்த 4 படங்களின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், செல்வராகவன் படத்தின் வெற்றிக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் மிக முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின் ஒருக்கட்டத்தில் இருவரும் பிரிந்தனர்.
அதன்பிறகு அதாவது 'புதுப்பேட்டை' படத்திற்குப் பிறகு ஏறக்குறைய 10 வருடங்கள் கழித்து இயக்குனர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்காக தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். அதனால், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்படத்தின் பாடல்களும் தற்போது பல வானொலிகளில் ஒலித்து ஹிட் ஆகியுள்ளன.
இந்நிலையில், இப்படத்தின் பின்னணி இசையை படத்தின் வெளியீட்டுக்கு முன்பே தனி இசை ஆல்பமாக வெளியிட உள்ளனர். தமிழில் இது புதிய முயற்சி என்று யுவன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசை குறித்து இயக்குனர் செல்வராகவன் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார்.
அதில், ''நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்காக யுவன் அமைத்துள்ள பின்னணி இசை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், 'அதிர்ச்சி' எனலாம். எங்கள் கூட்டணியில் உருவான பின்னணி இசையில் இதுவே மிகச்சிறந்தது!'' என யுவனை புகழ்ந்துள்ளார் செல்வராகவன்.
0 comments:
Post a Comment