‛பைரவா' படம் விஜய் ரசிகனை ஏமாற்றியதா.? - ஒரு ரசிகனின் பார்வை
27 ஜன,2017 - 16:01 IST
பொதுவாக பண்டிகை காலங்களில் படங்கள் வெளிவருவது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் தான். படத்திற்கான எதிர்பார்ப்பு வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே இருக்கும். தங்கள் ஹீரோவின் படம் என்று ரசிகர்கள், அந்த படத்தை காண ஒரு திருவிழாவையே ஏற்படுத்துவது வழக்கம். அப்படி தான் சமீபத்தில் பொங்கல் திருநாளின் போது வெளிவந்த விஜய்யின் பைரவா படம். இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தது என்ன, என்னென்ன குறைகள் அவர்களுக்கு இருந்தது என்பதை ஒரு ரசிகனின் பார்வையாக பார்ப்போம்...
இயக்குனர் பரதன்
அழகிய தமிழ் மகன் படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து விஜய் உடன் படம் பண்ணியதால், ஒட்டு மொத்த கருத்தையும் விஜய் மூலம் சொல்லி திணிக்க முற்பட்டாரோ என்னவோ... அதனால் தான் படத்தின் நீளம் ரொம்பவே அதிகம், 3 மணி நேரத்துக்கு கொஞ்சம் குறைவுவாக இருந்தது. படத்தில் வசனங்கள் இன்னும் கொஞ்சம் பட்டையை கிளப்பியிருக்கலாம். மேலும் சமீபத்தில் தான் மெடிக்கல் தொடர்பான ஒரு கதை வெளியானது, அடுத்தும் இதே மெடிக்கல் பின்னணி கதை என்பதால் ரசிகர்களிடத்தில் எடுபடவில்லை. அதேப்போல் பைரவா படத்தின் முதல்பாதியில் விஜய் என்னவோ மிஸ்ஸிங் ஆனது உண்மை. விஜய் படத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று வந்த ரசிகனை பரதன் கொஞ்சம் பதம்பார்த்துவிட்டார்.
விஜய்
படத்துக்கு படம் பார்த்து பார்த்து செயல்படும் விஜய், இந்த படத்தில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார். துப்பாக்கி, கத்தி படங்களில் பார்த்த விஜய் எங்கே என்பது தான் ரசிகர்களின் கேள்வி.? அதிலும் அந்த விக் கொஞ்சமும் பொருந்தவில்லை. கூடவே படத்தில் வசனங்களை அதிகப்படியாக இழுத்து இழுத்து வேற பேசுகிறார். இனி வரும் காலங்களில் கண்டிப்பாக கதை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
கீர்த்தி சுரேஷ்
நடிப்பு ஓகே. ஆனால் திருநெல்வேலி மொழியில் கொஞ்சம் கேரளா வாடையும் வந்தது. காஸ்ட்யூம் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. கீர்த்தியின் சிரிப்பும், நடிப்பும் ரசிகனுக்கு பிடிக்குது, ஆனால் அதை ஒரே மாதிரி பார்க்கும்போது ரசிகனுக்கு கொஞ்சம் வெறுப்பும் ஏற்படுகிறது, அதை கொஞ்சம் மாற்றினால் நல்லது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
பொதுவாக விஜய் படத்தில் டைட்டில் பாடல் போடும்போதே தியேட்டரே அதிரும். ரசிகர்கள் தியேட்டரில் எழுந்து நின்று ஆட்டம் போடுவார்கள். ஆனால் அது எல்லாம் பைரவாவில் மிஸ்ஸிங். வரலாம் வரலாம் வா... என்று படம் முழுக்க இது ஒன்றை வைத்தே ஓட்டினார் சந்தோஷ் நாராயணன் என்பதே உண்மை. கபாலி என்ற ஒன்றை வைத்துவிட்டு மட்டும் பெயர் வாங்கிவிட இது இறுதிச்சுற்று அல்ல, இசையில் இன்னும் பல சுற்றுக்கள் இருக்கிறது சந்தோஷ். இறங்கி வந்து மக்களோடு பழகி பாருங்கள், பல அனுபவங்கள் கிடைக்கும் ஆர்மோன்கள் எல்லாம் ஹார்மோனியம் வாசிக்க உதவும்.
காமெடி சதீஷ்
விஜய் நட்பு ஒன்றிற்காக மட்டுமே தொடர்ந்து படம் பண்ண முடியாது சதீஷ், ரசிகர்கள் நீங்கள் சொல்லும் நகைச்சுவையை வாய் விட்டு ரசிக்க வேண்டும், இந்த படத்தில் நீங்கள் சிரிக்க வைத்தது குறைவு தான். மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு போன்றவர்கள் திரையில் வந்தாலே சிரிக்கும் ரசிகர்கள், உங்களை பார்த்தாலும் சிரிக்க வேண்டும். அடுத்தடுத்து நல்ல படங்கள் கொடுங்க.
நாளை வசூல் விவரம் வரலாறு படைத்த செய்திகள் வரலாம், தயாரிப்பு நிறுவனம் அடுத்து வேற படம் எடுக்க தயார் ஆகலாம், இயக்குனர் வேறு படத்துக்கு போகலாம், டுவிட்டர் கூவிகள், நெட்டிசன்கள் உட்பட பலருக்கும் கவனிப்புகள் செய்து எதிர் மறை விமர்சனங்கள் வராமல் எதிர்க்கலாம். ஆனால் ரசிகன் மனதை, அவன் எதிர்பார்ப்பை யாராலும் மாற்ற முடியாது. விஜய் படம் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்போடு போகும் ரசிகன், எழுந்து போய்விட கூடாது என்ற அச்சம் எப்போதும் படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டும். பெரிய ஹீரோக்கள் படங்கள் தான் அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகும், அதேவேலை அவர்கள் மூலம் சொல்லும் கருத்துக்கள் மூளை முடுக்கெல்லாம் போய் சேரும் என்ற எண்ணம் ஆணித்தரமாக இருக்கும், அதை அழித்து விட வேண்டாம் என்பதே ரசிகனின் விருப்பம். குறைகளை நிறைகளாக்கி அடுத்தப்படத்தில் ஒரு அழுத்தமான கதையில் விஜய்யை எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment