Wednesday, January 25, 2017

விலங்குகள் நல வாரிய தூதர் பதவி, சௌந்தர்யா ரஜினிகாந்த் நீடிக்கிறாரா?


விலங்குகள் நல வாரிய தூதர் பதவி, சௌந்தர்யா ரஜினிகாந்த் நீடிக்கிறாரா?



26 ஜன,2017 - 09:51 IST






எழுத்தின் அளவு:








தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், குடும்பத்தினர் என பலரும் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து மாநில அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நிரந்தரமாக நடக்கும் எந்தப் பிரச்சனையும் வராது என்றார்கள். ஆனால், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்திய விலங்குகள் நல வாரியம், உள்ளிட்ட சில அமைப்புகள் மாநில அரசின் சட்டத்தை எதிர்த்து மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் ஜல்லிக்கட்டு தொடர்பான சந்தேகங்கள் மக்கள் மனதில் இருந்து கொண்டேயிருக்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம் அமைப்பும், பீட்டா அமைப்பும்தான் இதற்கு முன்னர் தீவிரமாக செயல்பட்டு வந்தன. பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட திரைப்படக் கலைஞர்கள் மீது தமிழ் அமைப்புகளும், மாணவர்களும் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து த்ரிஷா, தனுஷ், விஷால், ஆர்யா ஆகியோருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது. த்ரிஷா அந்த அமைப்பில் இல்லை என்று சொன்னார், பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனுஷ், தான் பீட்டா உறுப்பினர் இல்லை என்றும், பீட்டாவிடம் ஒரு முறை விருது வாங்கியதை பெரும் அவமானமாகக் கருதுகிறேன் என்றும் சொன்னார். விஷால், ஆர்யா இருவரும் தாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இதுவரை பேசியதேயில்லை என்றும் உறுதியளித்தனர். இன்னமும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் தமிழ் நடிகர்கள் அதிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என நடிகர் சங்கத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, நேற்று இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதையடுத்து, இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2016ம் வருடம் செப்டம்பர் மாதம் இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டார். திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதன் பாதுகாப்பில் அவர் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் அந்தப் பதவியில் நியமனம் செய்யப்பட்ட போதே ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சௌந்தர்யாவிற்கு எதிராக குரல் எழுப்பினர். அது குறித்து சௌந்தர்யா தரப்பிலும் அப்போது பதில் அளிக்கப்பட்டது.

திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ்தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவதுதான் அவரது பணி என்றார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்ததும், தற்போது மாநில அரசு சட்டம் நிறைவேற்றிய பிறகும் நீதிமன்றம் சென்றிருப்பதும் இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பும் ஒன்று.

ஜல்லிக்கட்டு பேராட்டம் தீவிரமாக இருந்த போது தான் பீட்டா உறுப்பினர் இல்லை என்றும், ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவு தருகிறேன் என்று மட்டுமே சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்திய விலங்குகள் நல வாரிய தூதர் பதவி பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை. அந்தப் பதவியில் அவர் இன்னும் நீடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து அவர் விளக்கம் தெரிவித்தால் மட்டுமே இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.


0 comments:

Post a Comment