"எனக்கு வாய்த்த அடிமைகள்" - நட்பை குறிக்கும் தலைப்பு
31 ஜன,2017 - 12:35 IST
சேதுபதி படத்தை தயாரித்த வாசன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்துள்ள படம் எனக்கு வாய்த்த அடிமைகள். நந்தா பெரியசாமியின் உதவியாளர் மகேந்திரன் ராஜாமணி இயக்கியுள்ளார். ஜெய், பிரணிதா, காளி வெங்கட், ‛நான் கடவுள்' ராஜேந்திரன், கருணாகரன், தம்பி ராமய்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 2ந் தேதி வெளிவருகிறது. படத்தை பற்றி இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி அளித்துள்ள பேட்டி வருமாறு:
அளவுக்கு மீறிய அன்பை செலுத்துபவர்களை அடிமை என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அதுபோல ஹீரோ மீது அதிக அக்கறையும், அன்பும் வைத்திருப்பவர்களை குறிப்பிடும் வகையில் எனக்கு வாய்த்த அடிமைகள் என்று ஹீரோவின் பார்வையில் தலைப்பு வைத்திருக்கிறோம்.
ஹீரோ ஜெய் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். அவருடன் வேலை செய்யும் ப்ரணிதாவை காதலிக்கிறார். அந்த காதலில் ஒரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சனையால் நொந்து போகும் ஜெய், நண்பர்களை எப்படி டார்ச்சர் செய்கிறார் என்பதும், அந்த டார்ச்சர்களை தாங்கிக் கொண்டு நண்பர்கள் எப்படி காதலை ஒன்று சேர்க்கிறார்கள் என்பதும்தான் கதை.
காதல், ஊடல் படம் என்றால் ஜெய்க்கு கச்சிதமாக பொருந்தும். கதையை கேட்டு அவர் ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். "என்னை மனசுல வச்சி கதை எழுதினீங்களா?" என்றுகூட கேட்டார். ஹீரோயின் கேரக்டருக்கு கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் இருக்கிறது. இதனால் பலர் நடிக்க தயங்கிய கேரக்டரில் பிரணிதா தைரியமாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இன்னும் கவனிக்கப்படாத நடிகை. அவருக்கு இந்தப் படம் நல்ல திருப்பம் தரும்.
இது காமெடி படம்தான் ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட காமெடியோ மற்றவர்களை நக்கல் நையாண்டி செய்தோ, அடிவாங்கியோ, அடித்தோ காமெடி செய்யவில்லை. இயல்பான யதார்த்தமான காமெடியாக இருக்கும். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்த காமெடி காட்சியும் அமைக்கப்படவில்லை. கதை சீரியசாக போகும், ரசிகர்களும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு திரைக்கதை. என்கிறார் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி.
0 comments:
Post a Comment