மும்பையைச் சேர்ந்தவர் நடிகை பருல்யாதவ். இவர், தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான டைரக்டர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்’ என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் `புலன் விசாரணை-2′ படத்திலும் கதாநாயகியாக நடித்தவர்.
இதேபோல மலையாளத்தில் புல்லட், கிருத்தியம், பிளாக் டாலியா என்பது உள்பட பல படங்களிலும், கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் இவர் டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை பருல்யாதவுக்கு நாய்கள் மீது அதிக பிரியம் என்பதால் அவர், மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள தனது வீட்டில் சில நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர், தனது வளர்ப்பு நாயுடன் அந்த பகுதியில் வாக்கிங் சென்றார்.
அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த சில தெருநாய்கள் நடிகை பருல்யாதவின் நாயை பார்த்து குரைத்துள்ளன. அந்த நாய்களிடம் இருந்து தனது நாயை காப்பாற்றுவதற்காக அவர், அவைகளை விரட்டினார்.
இதனால் அந்த தெரு நாய்கள் நடிகை பருல்யாதவ் மீது பாய்ந்து அவரை கடித்து குதறின. ஒரே நேரத்தில் 6 நாய்களின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் அங்கு ஓடிச்சென்று நாய்களை விரட்டி அவரை காப்பாற்றினார்கள். நாய்கள் கடித்து குதறியதில் நடிகை பருல்யாதவ்வின் முகம், கழுத்து, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment