சீரியல் வாய்ப்பு குறைந்து விட்டதால் சினிமாவில் நடிக்கிறேன்! -நிலானி
31 ஜன,2017 - 08:55 IST
சின்னத்திரையில் பல சீரியல்களில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நிலானி. தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெல்ல திறந்தது கதவு சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு, ஆண்தேவதை, சரவணன் இருக்க பயமேன், மன்னர் வகையறா ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக நிலானி அளித்த பேட்டி...
தற்போது நான் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெல்ல திறந்தது கதவு சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். அதோடு, சமுத்திரகனியின் ஆண்தேவதை, விமல் நடிக்கும் மன்னர் வகையறா, உதயநிதியின் சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கிறேன். அதனால் இனிமேல் சினிமா ரசிகர்களுக்கும் நான் நன்கு பரிட்சயமான நடிகையாகி விடுவேன். இந்த படங்களில் போலீஸ், வில்லனின் மனைவி, ஹீரோவின் முக்கியமான தோழி என கவனிக்கப்படும் கேரக்டர்களில் நடித்து வருகிறேன். ஏற்கனவே சீரியல்களில் நடித்து நல்ல அனுபவம் இருப்பதால் முடிந்தவரை கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறேன்.
மேலும், நான் இப்படி சினிமாவில் நடிப்பதற்கு முக்கிய காரணம், சீரியல்களில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்து வந்த நான், இப்போது மெல்ல திறந்தது கதவு சீரியலில் மட்டுமே நடிக்கிறேன். சின்னத்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் சினிமாவிலும் நடித்து வருகிறேன். அதோடு, சீரியல்களில் நடித்தது போன்று சினிமாவிலும் குடும்பப் பாங்கான வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன். அதோடு மாடர்ன் கேரக்டர்களிலும் நடிப்பேன். ஆனால், கிளாமர் மற்றும் ஆபாச வசனங்கள் பேசி நடிக்க மாட்டேன். சீரியல்களில் நடித்து சம்பாதித்த நல்ல நடிகை என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சினிமாவிலும் தரமான கேரக்டர்களுக்கே முதலிடம் கொடுப்பேன் என்கிறார் நிலானி.
0 comments:
Post a Comment