பிளாஷ்பேக் : சொல்லி அடித்த ஏ.பி.நாகராஜன்
17 ஜன,2017 - 13:51 IST
ஏ.பி.நாகராஜன் என்றாலே அவர் இயக்கிய பிரமாண்ட புராண படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் நால்வர், மாங்கல்யம், நல்ல தங்கை, பெண்ணரசி, நான் பெற்ற செல்வம், நல்ல இடத்து சம்பந்தம், குலமகள் ராதை, நவராத்தி உள்பட பல சமூக படங்களையும் இயக்கி உள்ளார். திருவிளையாடல் படத்தின் மிகப்பெரிய வெற்றிதான் அவரை புராண படங்கள் பக்கம் திருப்பியது. சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை என புராண படங்களை இயக்கினார்.
ஏ.பி.நாகராஜனுக்கு பெரிய நடிகர்களை வைத்து பிரமாண்ட புராண படம் எடுக்கத்தான் தெரியும் என்ற விமர்சனம் வந்தபோது அதை உடைக்க வேண்டும் என்று நினைத்தார். சின்ன நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் படம் எடுத்து வெற்றி பெற்று காட்டுகிறேன். என்று சவால்விட்டு அவர் எடுத்த படம் திருமலை தென்குமரி. ஸ்ரீவரலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் சி.பரமசிவம் தயாரித்த இந்தப் படத்தில் சிவகுமார், மனோரமா, குமாரி பத்மினி நடித்திருந்தனர். சீர்காழி கோவிந்தராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பக்தி சுற்றுலா செல்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில கோவில்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த சுற்றுலாவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து படத்தை இயக்கினார் ஏ.பி.நாகராஜன். ஒரு மாதத்தில் படத்தை முடித்து வெளியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
0 comments:
Post a Comment