இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி’ என்ற பெயரில் படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபார சாதனைகள் நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. சச்சின் தெண்டுல்கர் மும்பையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிகளில் விளையாடி, அவரது திறமை அடையாளம் காணப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியில் 16-வது வயதில் சேர்க்கப்பட்டார். பிறகு சர்வதேச போட்டிகளில் சதங்கள் குவித்து மளமளவென உயர்ந்தார்.
அவரது சிறுவயது வாழ்க்கை, உலக போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீடியோ பதிவுகளையும் அப்படியே படத்தில் பயன்படுத்துகின்றனர். சச்சின் படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக இந்தி நடிகர் ஷாருக்கான் கருத்து வெளியிட்டு உள்ளார்.
இந்த படம் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறும்போது, “எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது கடினமானது என்பதை புரிந்து கொண்டேன்” என்றார். படப்பிடிப்பு மும்பை பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 1,000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது.
0 comments:
Post a Comment