Sunday, January 22, 2017

இந்தியாவில் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும்: நடிகர் சமுத்திரகனி வலியுறுத்தல்


பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும், தடையில்லாத ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடெங்கிலும் அரசியல் கலப்பு இல்லாமல் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று போராடி வருகின்றனர்.


உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அரசியல்வாதிகளை கலங்கடித்து உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்று இரவு பகலாக 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


அவர்களுக்கு வேண்டிய உணவு, தேநீர், பிஸ்கட் போன்ற வற்றை குமாரபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வழங்கி போராட்டத்தினை உற்ச்சாகப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று குமாரபாளையம் போராட்டக் குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று பகல் 9 மணி அளவில் அந்த போராட்டத்தை தொடங்கி வைக்கவும், போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி திடீரென போராட்டப் பந்தலுக்கு வருகை தந்தார்.


அவரை போராட்டக் குழுவினர்கள் வரவேற்றனர். போராட்ட இளைஞர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-


தமிழன் என்ற உணர்வோடு இங்கு போராடும் இளைஞர்களையும், இளம் பெண்களையும், இளைஞர்கள், மாணவர்களை பாராட்டுகிறேன். தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. அதனைத் தடை செய்ய வேண்டும் என்று பீட்டா என்ற வெளிநாட்டு கார்பரேட் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று தமிழனின் அடையாளத்தை அழிக்க முயல்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.


0 comments:

Post a Comment