Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜன.20-ந் தேதி போராட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த போராடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக இன்று சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. அவர்களுக்கு பின்னால் இருந்து எங்களின் ஆதரவை தெரிவிப்போம்.


வருகிற ஜனவரி 20-ந் தேதி நடிகர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்துகொள்வார்கள். இந்த போராட்டம் அறவழியில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் மற்றும் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.


0 comments:

Post a Comment