தமிழக அரசியலுக்கு வருகிறார் சிரஞ்சீவி ?
17 ஜன,2017 - 18:07 IST
'கைதி நம்பர் 150' படத்தின் மிகப் பெரும் வெற்றிக்குப் பிறகு அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் சிரஞ்சீவி. காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தாலும் தீவிர அரசியலில் இறங்காமல் சற்று ஒதுங்கியே இருக்கிறார். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநில அரசியலும், இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு மிகவும் பரபரப்பாக உள்ளன. இரண்டு மாநிலங்களிலும் அவரவரர் கட்சிகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சிகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இந்த நிலையில் சிரஞ்சீவி தொடர்ந்து அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருப்பார் என்று சொல்லப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிரஞ்சீவி சந்தித்துப் பேசினாராம். அப்போது அவரை தீவிர அரசியலில் ஈடுபட ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அவரும் சம்மதம் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மேலும் வளர்க்க சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளராகப் பதவியேற்கும்படி கேட்டுக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களும் உடனிருந்தார்களாம். இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் கட்சி நடத்த உள்ள போராட்டத்தில் சிரஞ்சீவி கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ஏற்கெனவே, தமிழக அரசியில் கடந்த சில வாரங்களாக சூடு பிடித்துள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக ரஜினி ரசிகர்களும், சரத்குமார் ரசிகர்களும் ஒருவரை மற்றவர் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிரஞ்சீவி தமிழ்நாடு பக்கம் வந்தால் இன்னும் சூடு பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதுன் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment