முதன்முதலாக போலீஸ் வேடத்தில் கல்லூரி அகில்!
05 ஜன,2017 - 09:21 IST
கல்லூரி, வால்மீகி, மாசாணி, ரெட்டை வாலு, இளமி உள்பட பல படங்களில் நடித்தவர் அகில். இவர் தற்போது படைவீரன், அலைபேசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அலைபேசியில் நாயகனாக நடிக்கும் அகில், படைவீரன் படத்தில் ஒரு அதிரடியான போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அகில் கூறும்போது, சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானபோதும், தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிக்க நான் விரும்பவில்லை. ஹீரோ, வில்லன், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என மாறுபட்ட வேடங்களில் நடித்து மாறுபட்ட நடிகனாக சினிமாவில் இடம்பிடிக்கவே ஆசைப்படுகிறேன். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான இளமி படத்தில் வில்ல னாக நடித்திருந்தேன். அது பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், இப்போது அலைபேசி படத்தில் பார்க்காமலே காதலிக்கும் நாயகனாக நடித்து வரும் நான், படைவீரனில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ்க்கு போலீஸ் என்றாலே பிடிக்காது. அப்படிப்பட்ட அவருக்கும் எனக்குமிடையே என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மிக வித்தியாசமான கதைக்களத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்பது சந்தோசமாக உள்ளது.
அதோடு, தேனியில் நடக்கும் கிராமத்து கதையான இந்த படத்திற்காக முதன்முறையாக நான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்காக எனது பாடிலாங்குவேஜை பிரத்யேகமாக மாற்றவில்லை. கிராமப்புறங்களில் உள்ள போலீஸ்காரர்கள் எப்படி ஓரளவு பெருத்த உடம்புடன் இருப்பார்களோ அதேபோன்ற இயல்பான தோற்றத்தில் நடிக்கிறேன். இந்த வேடத்தில் முதன்முதலாக நடித்தபோது எனக்குள் பயம் இருந்தது. ஆனால் இப்போது அது போய் விட்டது. அதோடு, இந்த படம் எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கித்தரும் என்கிற நம்பிக்கை இப்போது அதிகரித்துள்ளது என்கிறார் கல்லூரி அகில்.
0 comments:
Post a Comment