த்ரிஷா நடிக்கும் 1818
05 ஜன,2017 - 08:31 IST
ஒரு காலத்தில் கதாநாயகிகளின் மார்க்கெட் ஐந்து வருடங்கள்தான். அதன் பிறகு கல்யாணம் செய்து கொண்டு போய்விடுவார்கள். அல்லது அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த வழக்கத்துக்கு மாறாக 15 வருடங்களாக கதாநாயகியாகவே சில நடிகைகள் நடித்து வருவதுதான் ஆச்சர்யம். அவர்களில் த்ரிஷாவும் ஒருவர்.
கடந்த 14 ஆண்டுகளாக வெற்றிகரமான கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா, தற்போது 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 'கொடி' திரைப்படத்தில், அவர் ஏற்றிருந்த வில்லி வேடத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அடுத்தடுத்து தான் நடிக்கவிருக்கும் படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார். தற்போது மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, 96 ஆகிய படங்களை கையில் வைத்திருக்கிறார் த்ரிஷா.
இந்த பட்டியலில் புதிய இணைப்பாக, தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் தயாராகும் '1818' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தைதெலுங்குப்பட இயக்குநர் ரிதுன்சாகர் இயக்குகிறார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், 'சூது கவ்வும்' ரமேஷ் திலக், 'ராஜா ராணி' மீரா கோஷல் ஆகியோரும் நடிக்கிறார்கள். தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு மும்பையில் பலர் கொல்லப்பட்ட பரபரப்பான சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையாம்.
0 comments:
Post a Comment