யார் நிஜமான ஹீரோக்கள் ?
22 ஜன,2017 - 12:20 IST
தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாது என்பதுதான் கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வரும் நிலையாக இருந்தது. இனி, திரைப்பட நடிகர்களை நம்பி எந்தவிதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதில் இன்றைய தமிழ் இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தற்போது நடைபெற்று வரும் போராட்டம் மூலம் அனைவருக்கும் புரிந்து வருகிறது.
அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்வதும், விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்வதும் எனத்தான் இந்தக் கால இளைஞர்கள் இருந்து வருகிறார்களோ என்று இருந்தது. ஆனால், நடைபெற்று வரும் போராட்டங்களில் அந்த இளைஞர்கள் தலை மேல் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருந்த ஹீரோக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
விஜய் முகத்தை மூடிக் கொண்டு மக்களோடு மக்களாக தானும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அது விஜய்தான் என்று தெரிந்திருந்தாலும் அதற்காக உணர்ச்சிவசப்படாமல் அவரையும் தங்களது சக போராட்டக்காரராகப் பார்த்த உணர்வுதான் இருந்தது. அவரைப் பார்த்ததுமே செல்ஃபி எடுக்க யாருக்கும் தோன்றவில்லை. போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வரும் நடிகர்களும் அப்படித்தான் வர வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நடிகர் கார்த்தியும் முகத்தை மூடிக் கொண்டுதான் போனார். ஆனால், நடிகை நயன்தாராவோ அந்த ஹீரோக்களையே யோசிக்க வைக்கும் அளவிற்கு முகத்தை மூடாமல் சென்று போராட்டக் களத்தில் பங்கெடுத்தார். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ், சிம்பு, என பலர் சென்று வந்தாலும் ராகவா லாரன்ஸ், ஆரி, சௌந்தரராஜா என சிலர் போராட்டக்களத்திலேயே இரவும் பகலாக இருக்கின்றனர்.
கமல்ஹாசன் டிவிட்டரில் அவ்வப்போது மாணவர்களை உத்வேகப்படுத்தும் வார்த்தைகளுடன் அவர்களைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார். அன்னா ஹசாரே 2011ம் ஆண்டு டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ரஜினிகாந்த் இன்று மாணவர்களின் போராட்டம் குறித்து வெளிப்படையான ஆதரவு கொடுக்காமல் இருக்கிறார். அஜித் தன்னை ஒரு நடிகராக மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டு நடிகர் சங்க ஆதரவு போராட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு தன் கடமை முடிந்துவிட்டதென சென்றுவிட்டார்.
மக்களின் பிரச்சனைகளை திரையில் மட்டுமே நடித்து தங்களை அவதார புருஷர்களாக, நாயகர்களாக காட்டிக் கொண்ட ஹீரோக்கள் இன்று மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு எப்படி ஆதரவு தருகிறார்கள், தோள் கொடுக்கிறார்கள் என்பதை அந்தந்த நடிகர்களின் ரசிகர்களும் பொது மக்களும் உண்மையாக உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது.
0 comments:
Post a Comment