Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு, மலையாள நடிகர்களுக்கு கேரளாவில் எதிர்ப்பு ?


ஜல்லிக்கட்டு ஆதரவு, மலையாள நடிகர்களுக்கு கேரளாவில் எதிர்ப்பு ?



24 ஜன,2017 - 17:24 IST






எழுத்தின் அளவு:








ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடிகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தமிழ்க் கலாச்சாரமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் என வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழில் நடிக்கும் நடிகர்கள் பலரும் குரல் கொடுத்தனர்.

மொழி கடந்து, மாநிலம் கடந்து கூட தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் வெளிப்படையாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அதே போல மலையாள நடிகர்களான மம்முட்டி, ஜெயராம், நிவின் பாலி, வினித் சீனிவாசன் உள்ளிட்டவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.

தமிழ் மக்களுக்கு ஆதரவாக மலையாள நடிகர்கள் தெரிவித்த ஆதரவிற்கு மலையாள திரைப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்களாம். இதேபோல கேரள மாநில பிரச்சனைகளுக்கு அவர்கள் குரல் கொடுக்கவில்லையே என்றும் சொல்கிறார்களாம்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை வந்த போது கூட தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் மம்முட்டி. தமிழ் மக்கள் சேற்றில் காலை வைக்கவில்லை என்றால் கேரள மக்களுக்கு சோறு கிடைக்காது என்று சொன்னதால் இங்குள்ள தமிழ் மக்களால் பாராட்டப்பட்டவர்.

மலையாள ரசிகர்களிடம் தற்போது மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள, நடிகரும், இயக்குனருமான வினீத் சீனிவாசன் சென்னையில் படித்து வளர்ந்தவர். “ஒரு மாநிலமே இப்படி ஒன்று திரண்டு போராடுவதைப் பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. சென்னையில் 17 ஆண்டு காலம் இருந்தேன், இப்படி ஒன்றை இதற்கு முன் பார்த்ததே இல்லை. என்னுடைய அன்பும் ஆதரவும் தமிழ்நாட்டு சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் உண்டு. உங்கள் குரல் கேட்கப்படும்,” என கடந்த வாரமே அவருடைய முகப்புத்தகத்தில் தன் ஆதரவை அவர் தெரிவித்திருந்தார்.

மலையாள நடிகர்கள் இங்கு நடைபெற்ற போராட்டத்திற்கு தெரிவித்த ஆதரவை தமிழ் மக்கள் நன்றி தெரிவித்தன நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமை உணர்வை மலையாள நடிகர்கள் பாராட்டியதை கேரள ரசிகர்கள் குறை கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.


0 comments:

Post a Comment