பிஸி நடிகரான அரவிந்த்சாமி
03 நவ,2016 - 16:19 IST
அரவிந்த்சாமி என்றாலே ஒரு காலத்தில் பெண்களிடம் அப்படி ஒரு மவுசு இருந்தது. பெரிய ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவே வேண்டாம் என நடிப்பை விட்டே விலகினார் அரவிந்த்சாமி. தன்னுடைய சொந்த பிஸினசைப் பார்த்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாள அளவிற்கு மாறிப் போயிருந்தார். குண்டாக மாறி, தலையில் முடி எல்லாம் இல்லாமல் அந்த அரவிந்த்சாமியா இவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் மூலம் நடிக்க வந்தார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறாமல் போகவே அவரைப் பற்றி மீண்டும் யாரும் பரபரப்பாகப் பேசாமல் போய்விட்டார்கள். இருந்தாலும் அவரைத் தேடிப் போய் தன்னுடைய 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடிக்க அழைத்து வந்தார் மோகன்ராஜா. படமும் சூப்பர் ஹிட்டாக அரவிந்த்சாமியின் வில்லத்தனத்தைப் பற்றி ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். தெலுங்கில் ரீமேக் செய்யும் போது கூட அவரை விட்டால் வேறு யாரும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என அவரையே நடிக்க வைத்துள்ளார்கள்.
தமிழில் 'போகன்' படத்தையும் தெலுங்கில் 'தனி ஒருவன்' ரீமேக்கான 'துருவா' படத்திலும் நடித்து முடித்துவிட்டார் அரவிந்த்சாமி. தற்போது 'சதுரங்க வேட்டை 2' படத்திலும் 'வணங்காமுடி' படத்திலும் நடித்து வருகிறார். அவரைத் தேடி மேலும் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் மிகவும் பிசியாகவே இருக்கிறார் அரவிந்த்சாமி.
0 comments:
Post a Comment