தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் தியாகராயர்நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றப்பட்டது. கல்லூரிக்கு மிரட்டல் வந்ததாலும், போலீஸ் அனுமதி மறுத்ததாலும் இட மாற்றம் செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நேற்று மதியம் 2 மணிக்கு நடிகர் சங்க வளாகத்தில் கூடியது. இதற்காக அங்கு உள்ள காலிமனையில் சாமியனா பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
அதன் முன்னாள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், நாகேஷ், சாவித்திரி உள்பட மறைந்த நடிகர்-நடிகைகளின் உருவப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.
நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சச்சு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. அவர்களுடைய ஆதரவாளர்கள் கருப்புச்சட்டை அணிந்து பொதுக்குழுவுக்கு வந்திருந்தனர். நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டையும், அழைப்பிதழும் வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நடிகர் சங்க நுழைவுவாயிலில் போலீசாரும், தனியார் பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அழைப்பிதழ் இல்லாத சிலர் உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.
வாசலில் இருந்தவர்கள் அழைப்பிதழ் இருந்தால் தான் அனுமதிக்க முடியும் என்று தடுத்து நிறுத்தினார்கள். இந்தநிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளினார்கள். திடீரென்று பயங்கரமாக கைகலப்பில் ஈடுபட்டனர்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாசின் கார் கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர்.
பின்னர் ரகளையில் ஈடுபட்டதாக 19 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பதற்றமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்தநிலையில் தனது கார் உண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக கருணாஸ் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடியை சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர்.
கருணாஸ் தனது ஆதரவாளர்களை ஏவி தன்னை தாக்கியதாக பிரபுவும் தனியாக புகார் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment