அவமானமும், நிராகரிப்பும் தான் என் வெற்றிக்கான முக்கிய காரணம்: 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி
24 நவ,2016 - 04:26 IST
இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், நாயகன் மற்றும் இயக்குனராக, மீசையை முறுக்கு படத்தில் அறிமுகமாகும் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான். மியூசிக் ஆல்பங்கள் தான், ரசிகர்களிடம் இவரை பிரபலப்படுத்தின. நடிப்பு, இசையுடன் மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் ஆகிய பொறுப்புகளையும் இவர் தான் ஏற்றுள்ளார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
ஆதி, உங்களை பற்றி?
நான் கோயம்புத்துார் பையன். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். எம்.பி.ஏ.,வும் முடித்து விட்டேன். அப்பாவும், அம்மாவும், கல்லுாரி பேராசிரியர்கள். தாத்தாவும், பாட்டியும், ஆசிரியர்கள்; இப்படி மெத்த படித்த குடும்பம் என்னோடது.
இசையில் ஆர்வம் வந்தது எப்படி?
என் அப்பா, நன்றாக கவிதை எழுதுவார். தாத்தா, தமிழ் வாத்தியார். அதனால், சிறு வயது முதல் தமிழ் பற்றுடன் வளர்ந்தேன். இளம் வயதிலேயே, பாடல்கள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வம் தான், என்னை சினிமாவுக்குள் அழைத்து வந்தது.
சினிமாவுக்கு வருவதற்கு உங்கள் குடும்பத்தினர் ஆதரவாக இருந்தனரா?
என் பெற்றோர் கொடுத்த ஊக்கம் தான், தற்போது நான் சினிமா இயக்குவதற்கு காரணம். யவனராணி, சாண்டில்யன் கதைகள், கல்கி, சிவகாமியின் செல்வன், பொன்னியின் செல்வன் இதெல்லாம் சின்ன வயதிலே என்னுள், ஆழமாக பதிந்து விட்டன. பாடப் புத்தகம் மட்டுமே அறிவை வளர்க்காது என்பதில், என் குடும்பத்தினர் தெளிவாக இருந்தனர்.
நீங்க முறைப்படி இசை கற்றுக்கொள்ளவில்லை தானே ?
உண்மை தான். இன்டர்நெட்டில் தான் பாதி தெரிஞ்சுக்கிட்டேன். முறைப்படி இசையை கற்காவிட்டாலும், ஏராளமான புத்தங்களை படித்து, பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். புதிது புதிதாக, நானே சில இசைகளை உருவாக்கினேன்.
ஹிப் ஹாப், ராப் பற்றி, பாதி பேருக்கு தெரியலையே?
ஹிப் ஹாப் என்பது ஒரு கலாசாரம். 1970களில், கறுப்பின மக்கள் வெள்ளையர்களால் அடிமை படுத்தப்பட்ட போது, அதை வன்முறைகளால் எதிர்க்காமல், கவிதை, இசை மூலமாக அதை வெளிப்படுத்த, ஒரு கலாசாரமாக உருவானது தான் ஹிப் ஹாப். அந்த கவிதையை இசை மீது தொகுத்து பாடுறாங்களே, அதுக்கு பேர் ராப். இப்போது, இதில் டான்ஸ் வடிவமும் வந்து விட்டது. எங்கள் இசைக் குழுவுக்கு, ஏன் ஹிப் ஹாப் தமிழா என பெயர் வைத்தோம் என்றால், பாரதியார் போன்ற மிகப் பெரிய கவிஞர்கள், நாட்டின் விடுதலை போராட்டத்துக்கு, கவிதை மூலமாக தான், புரட்சியை துாண்டினர். அதனால், பாரதியார் முகத்துடன், இதற்கு லோகோ வைத்தோம்.
பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என, பல திறமைகளை கையில் வைத்திருக்கிறீர்களே; எப்படி சாத்தியம்?
இத்தனை விஷயங்களை செய்கிறேன் என்பதற்காக, என்னை திறமைசாலி என கூற மாட்டேன். இன்னும் ஏதோ ஒரு தேடலை நோக்கி தான் ஓடுகிறேன். என்னை யாராவது அங்கீகரிக்க மாட்டாங்களா என்ற ஒரு பசி அல்லது வெறி எனக்குள் இருந்தது. 2011ல், இதற்காக சண்டை போட்டு விட்டு, வீட்டில் இருந்து ஓடிவரும் அளவுக்கு, அந்த வெறி இருந்தது. பல இடங்களில் நிராகரிக்கப்பட்டேன்; அவமதிக்கப்பட்டேன். இதன் மூலம் ஏற்பட்ட நம்பிக்கையும், அனுபவமும் தான், தற்போது இதுபோன்ற பல துறைகளை கையாளும் பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கு.
சினிமாவில் உங்க குரு யார்?
சுந்தர்.சி தான். அவர், ஜனரஞ்சகமா ஒரு கதையை சொல்ல நினைப்பார்; நானும் அப்படித் தான். எதையும் வற்புறுத்தி திணிக்க கூடாது; எளிமையாக இருக்க வேண்டும் என நினைப்பேன்.
உங்கள் பாடல்கள் ஒரே மாதிரி இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
முழுக்க முழுக்க இளைஞர்களை வைத்துத் தான் பாடல் தயார் செய்கிறேன். நான் எழுதி, பாடி, இசையமைத்த பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. ஒரு சிலர், என் பாடல்கள் ஒரே மாதிரி இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அந்த பாடல்கள் ஹிட் ஆகின்றன. அப்படி என்றால், வெற்றி பெறும் பார்முலாவைத் தானே, நான் பின்பற்ற வேண்டும்.
மீசையை முறுக்கு படத்தில் என்ன ஸ்பெஷல்?
அப்பாவுக்கும், மகனுக்குமான ஒரு புரிதல் தான், இந்த படத்தின் மையப் புள்ளி. அப்பாவாக, விவேக் நடிக்கிறார். மற்றபடி, அனைவரும் புதுமுகங்கள் தான். எல்லாருமே ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்கள். என்ன நடந்தாலும், முயற்சியில் இருந்து பின்வாங்காதே; தைரியமாக எதிர்கொள் என்ற தாரக மந்திரத்தை, இந்த படம் சொல்லும்.
0 comments:
Post a Comment