சட்ட ரீதியாக தீர்வு காண்பேன்: சரத்குமார்
27 நவ,2016 - 23:22 IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தர நீக்கம் செய்யபட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக தீர்வு காண்பேன் என சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்னிந்திய நடிகர் சங்க பொது குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல.
என்னை இன்று தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும் இயக்கத்தின் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி.
அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம்
எனவே எனது அன்புக்கினிய ரசிகர்களும் தொண்டர்களும் எந்த ஒரு பதட்டமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment