Friday, November 25, 2016

பிளாஷ்பேக்: குண்டலகேசி காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்ட மந்திரி குமாரி


பிளாஷ்பேக்: குண்டலகேசி காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்ட மந்திரி குமாரி



25 நவ,2016 - 10:56 IST






எழுத்தின் அளவு:








தமிழில் ஐம்பெரும் காப்பியங்களாக போற்றப்படுவது சிலப்பதிகாரம் மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி. இதில் குண்டலகேசி காப்பியம் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. ஒரு சில பாடல்கள்தான் கிடைத்திருக்கிறது. அதில் ஒரு பாடலில் சொல்லப்படும் சம்பவத்தைக் கொண்டு கருணாநிதி மந்திரிகுமாரி என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகத்தை சினிமாவாக்க விரும்பினார் மார்டன் தியேட்டர் சுந்தரம். கருணாநிதியும் நாடகத்தை திரைப்படவடிவத்துக்கு மாற்றிக் கொடுத்தார்.

மந்திரிகுமாரி படத்தில் எனது நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரனை ஹீரோவாக போட்டால்தான் கதையை தருவேன் என்றார் கருணாநிதி. அதற்கு மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரமும் ஒப்புக் கொண்டார். மந்திரி குமாரி உருவானது.மந்திரி குமாரியின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகாவும் மந்திரியின் மகள் அமுதாவும் ஆருயிர் தோழிகள். தளபதியை (எம்.ஜி.ஆர்) ராஜகுமாரி காதலிக்கிறாள். மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். கொள்ளையடிப்பது ஒரு கலை என்பது அவன் கொள்கை. மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள்.

கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி தளபதி மீது விழுகிறது. தன் கணவன் கொடியவன் கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான். வாராய் நீ வாராய்... என்று பாட்டுப்பாடியபடியே, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்.

அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்" என்று வேண்டுகிறாள், அமுதா. அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார் அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

1950ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம். மகத்தான வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தியது. எல்லீஸ் ஆர் டங்கன் இப்படத்தை இயக்கியிருந்தார்.


0 comments:

Post a Comment