விஜய் உடன் மோத முடிவெடுத்த விஷால்
24 நவ,2016 - 17:03 IST
விஜய் நடித்த படம் வெளியாகும் போது தான் நடித்த படங்கள் வெளியாகாமல் ஒதுங்கிப்போவார்கள் பல ஹீரோக்கள். விஷாலோ, விஜய், அஜித் யார் நடித்த படம் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் குதிப்பார். ஏற்கெனவே விஜய் நடித்த படம் வெளியானபோது விஷால் படம் இரண்டுமுறை ரிலீஸ் ஆகி போட்டி போட்டுள்ளன.
2007ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் 'போக்கிரி' படம் வெளியானபோது, விஷாலின் 'தாமிரபரணி' படம் வெளியானது. 2014ஆம் ஆண்டு தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 22 ஆம் தேதி விஜய்யின் 'கத்தி' படமும், விஷாலின் 'பூஜை' படமும் மோதின. தற்போது 3 ஆவது முறையாக 2017ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் 'பைரவா' படமும், விஷாலின் 'கத்தி சண்டை' படமும் வெளியாகவிருக்கிறது.
'சகலகலா வல்லவன் அப்பாடக்கர்' படத்தைத் தொடர்ந்து சுராஜ் இயக்கியிருக்கும் படம் 'கத்தி சண்டை'. விஷால், தமன்னா நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படம் முதலில் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக, மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்துபோனதால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டன. அதில் 'கத்தி சண்டை' படமும் ஒன்று.
டிசம்பரில் இப்படம் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சூழலில், தற்போது 'கத்தி சண்டை' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment