அமைதியான சங்கத்தை அடிதடி சங்கமாக மாற்றி விட்டனர்: சரத்குமார்
30 நவ,2016 - 12:31 IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த சரத்குமார் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய நிர்வாகிகள் அறிவித்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது குறித்த வழக்கு நடந்து வருகிறது. பொதுக்குழுவின் இடமாற்றத்தை முறைப்படி உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் நடத்தி உள்ளனர். இது சங்க விதிப்படி செல்லாது, அடிதடி நடந்திருக்கிறது. கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. நான் எத்தனையோ பொதுக்குழு நடத்தியிருக்கிறேன். ஒரு சின்ன சலசலப்புகூட வந்ததில்லை. அமைதியாக இருந்த சங்கத்தை அடிதடி சங்கமாக மாற்றியதுதான் இவர்கள் செய்த சாதனை.
என் மீது ஏதாவது ஒரு குற்றசாட்டை கூறிக்கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டி பொறுப்புக்கு வந்தவர்கள் இப்போது குற்றத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் 150 கோடி ஊழல் என்றார்கள். பிறகு 60 கோடி என்றார்கள். அதன்பிறகு 1.67 கோடி என்றார்கள். புதிது புதிதாக குற்றங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட கணக்கையெல்லாம் கொடுத்தாகிவிட்டது. என்றார்.
0 comments:
Post a Comment