விஜயசந்தர் படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படம்! -விக்ரம் முடிவு
26 நவ,2016 - 14:02 IST
இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் சாமி-2வில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், திடீரென்று தனது புதிய படத்தில் விக்ரம் நடிப்பதாக கெளதம் மேனன் தெரிவித்தார். அதனால் விக்ரமின் அடுத்த படம் கெளதம் மேனன் படம் என்றே செய்திகள் வெளியாகி வந்தன. அந்த நேரத்தில்தான் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இன்னொரு புதிய செய்தி வெளியானது. இருப்பினும் தற்போது விக்ரம் கெளதம்மேனன் இயக்கும் படத்தில்தான் அடுத்து நடிக்கிறார் என்றொரு செய்தி தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால்? விஜயசந்தர் படத்தை முடித்த பிறகுதான் விக்ரமினால் வேறு படத்தில் நடிக்க முடியும் என்றொரு இக்கட்டான சூழ்நிலை அவருக்கு உள்ளது. காரணம், கரிகாலன் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கிய விக்ரம், அந்த படத்தில் நடித்த சில தினங்களிலேயே தனக்கு திருப்தி இல்லை என்று அதிலிருந்து விலகி வேறு படத்தில் நடித்தார். அதனால் கரிகாலன் படத்தை தயாரித்த சில்வர்லைன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்துக்கு கொடுத்திருந்த கால்சீட் அப்படியேதான் இருந்தது.
அதனால் எங்களுக்கு கொடுத்த கால்சீட்டில் ஒரு படம் நடித்து தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதோடு, அது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத்திலும் முறையிட்டனர். அதையடுத்து, ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியுள்ள நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணி கொடுத்து விட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விக்ரமிடம் உறுதியாக கூறி விட்டனர். விளைவு, கெளதம்மேனன், ஹரி என எந்த டைரக்டர் படத்தில் நடிக்க விக்ரம் ஓகே பண்ணியிருந்தாலும், சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்து கொடுத்த பிறகே அவரால் மற்ற படத்தில் நடிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது. ஆக, விக்ரமின் அடுத்த படம் விஜயசந்தர் இயக்கும் படம்தான் என்பது உறுதியாகியுள்ளது.
0 comments:
Post a Comment