ரன்வீர் சிங் விளம்பரத்திற்கு சித்தார்த் எதிர்ப்பு
24 நவ,2016 - 15:53 IST
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் சமீபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆயத்த ஆடை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில் அலுவலகத்திற்கு வேலைக்கு வரும் பெண்ணை அவர் தோளில் சுமந்து கொண்டு நிற்பது போலவும், அதை லிஃப்ட்டில் ஒரு 'பட்லர்' நின்று சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போலவும் இடம் பெற்றிருக்கிறது. அதோடு, “பின்னால் பிடிக்க வேண்டாம், வேலையை வீட்டில் செய்யுங்கள்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்திற்கு சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த விளம்பரம் மூலம் அவர்கள் சில கேள்விகளையும் எழுப்புகிறார்கள். “பெண்கள் வேலைக்கு வரக் கூடாதா, வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூடியவர்களா ?, “விளம்பரத்தில் ஆண் முழுமையாக ஆடை அணிந்திருக்க, பெண் மட்டும் மினி ஸ்கர்ட் அணிந்து ஏன் ஆபாசமாக இருக்க வேண்டும்”, “உங்களுடன் வேலை பார்ப்பவர்களை பின்னால் பிடிக்காதீர்கள், வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்வதா ?”, என பல கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள்.
அந்த விளம்பரத்தில் ஏன் நடித்தீர்கள் என ரன்வீர் சிங்கிற்கும் அவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே நடிகர் சித்தார்த் இந்த விளம்பரம் குறித்து தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்களை இந்த அளவிற்கு கீழ்த் தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேறு எந்த தமிழ் நடிகரும் இது பற்றி கருத்துக்களைச் சொல்ல முன் வராத போது, சித்தார்த் தன்னுடைய கருத்தைத் தைரியமாக பதிவு செய்திருக்கிறார்.
0 comments:
Post a Comment