டைமிங்கான டைட்டிலில் ஜெய் அகாஷ்
23 ஜன,2017 - 10:53 IST
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடி வரும் மாணவர்களை பொறுக்கிகள் என்று விமர்சித்தார் பா.ஜ.க. பிரமுகரான சுப்பிரமணிய சுவாமி. அவரது கருத்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி 'ஆமா நான் பொறுக்கிதான்' என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்.
இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? ''சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக 'பிச்சைக்காரன்', 'நானும் ரௌடிதான்' போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம்'' என்கிறார் ஜெய் ஆகாஷ்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தன்னுடைய தவறான நடத்தையினால் இண்டஸ்ட்ரியிலிருந்து காணாமல் போனவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நடிக்கிறார். ஜி.ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அனிஷா, தீப்தி நடிக்கிறார்கள். இவர்களுடன் பொன்னம்பலம், பவர் ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தேவராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் துவங்கி லண்டன், மலேசியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கிறதாம். இந்த படத்திற்கு யூ.கே.முரளி இசை அமைக்கிறார். படத்தொகுப்பை பிரியாஜித் கவனிக்கிறார். சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.
0 comments:
Post a Comment