தயாரிப்பாளர் சங்கத்தில் குஷ்பு போட்டி ஏன்?: பரபரப்பு தகவல்கள்
02 ஜன,2017 - 10:11 IST
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா சங்கங்களின் சக்தி வாய்ந்த தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் பல அணிகள் களம் அமைத்து போட்டியிட இருக்கிறது.
குறிப்பாக இந்த தேர்தலில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைவர் கலைப்புலி எஸ்.தாணு போட்டியிடவில்லை. ஆனால் அவர் தனக்கு ஆதரவான ஒரு வலுவான அணியை களத்தில் இறக்குகிறார். நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமார், ராதாரவி இருவரும் தங்களை தோற்கடித்த விஷாலுக்கு பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நிலையில் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவோம் என்று சவால் விட்டிருப்பதால் அந்த சவாலை முறியடிப்பதன் மூலம் விஷாலுக்கு தோல்வி பாடத்தை கற்றுக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தற்போதைய தலைவர் தாணுவுடன் கூட்டணி சேரலாம் என்று தெரிகிறது.
அப்படி சேரும் பட்சத்தில் தலைவர் பதவிக்கு ராதிகா சரத்குமாரையும், செயலாளர் பதவிக்கு தற்போது துணை தலைவராக இருக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன், பொருளாளராக இருக்கும் சத்யஜோதி தியாகராஜனையும் களத்தில் இறக்கலாம் என்று தெரிகிறது. இதை முன்னமே அறிந்துதான் விஷால் அணி குஷ்புவை தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. பெண் என்கிற வகையில் ராதிகாவுக்கு ஓட்டுக்கள் செல்வதை தடுக்க ஒரு பெண்ணை நிறுவத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் விஷால் அணியிலிருந்து நாசர் மனைவி கமீலாவை நிறுத்த முடிவு செய்திருந்தார்கள். நாசருக்கும், கலைப்புலி எஸ்.தாணுவுக்கும் நல்ல புரிதல் இருப்பதால் அவர் தாணு அணிக்கு எதிராக மனைவியை நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை. இதனால்தான் குஷ்பு போட்டியிடுகிறார். இந்த இரண்டு அணிகள் தவிர டி.ராஜேந்தர், கேயார் தலைமையில் ஒரு அணியினரும். தற்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment