தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ (PETA – People for the Ethical treatment of animals ) தடை வாங்கியிருக்கிறது. இந்தத் தடை, விலகும் என்று காத்திருந்த தமிழர்கள் இன்றைக்குப் பொங்கி எழுந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அலங்காநல்லூரில் ஆரம்பித்த மாணவர்களின் எழுச்சி முழக்கம், தமிழகமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இரவு பகல், இளைஞர்கள் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பேதமுமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தப் போராட்டம்.
இந்தப் பீட்டாவின் தடை நியாயமானதா? அவர்களின் உண்மை முகம் என்ன?
”ஜல்லிக்கட்டு” என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித்தனம் என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுள்ள பீட்டா நிறுவனத்தின் மறுமுகத்தை ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் சுருக்கம் இது…
யார் இந்த PETA?
சர்வதேச அளவில், விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஓர் நிறுவனமாகத் தன்னை காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனம், 1980ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. விலங்குகளை உண்ணவோ, அவற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது; விலங்குகளை வைத்து எந்த மருத்துவ ஆய்வும் செய்யக் கூடாது என்பதெல்லாம் இவர்களின் முக்கியக் கொள்கை. அதே சமயம் செல்லப்பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 லட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். லாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த ’பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், அப்பாவி விலங்குகளைக் காப்பாற்றி அவற்றிற்குப் புகலிடம் அளிக்கும் சரணாலயமாக ‘பீட்டா’ செயல்படுகிறது என்று மக்களிடம் நிலவும் நம்பிக்கைதான். ஆனால் உண்மையில் ‘கருணைக் கொலை’ என்ற பெயரில் விலங்குகள் இனத்தையே ‛பீட்டா’ அழித்து வருவதாக அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. அங்கு அனாதையாக மீட்கப்படும் செல்லப்பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் மீட்டு செல்லவில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்யச் சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணைக் கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை பீட்டா நிறுவனம் கொன்று குவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்த இந்தச் செய்தி தற்போது, ஆவணப்படங்களுடன் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ’பீட்டா’ வின் முகத்திரையைக் கிழிக்குமாறு சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார் ‘நேதன் இனொக்ராட்’ என்ற சமூக ஆர்வலர். ஹஃபிங்டன் போஸ்டில் வெளி வந்துள்ள அந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அதிர வைக்கும் ரகம்.
* பீட்டா நிறுவனத்தின் வண்டிகளிலேயே விலங்குகளைக் கொல்வதற்கான விஷ ஊசிகளைக் கொண்ட பைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன.
* கொல்லப்பட்ட சில வகை விலங்குகளின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க, 9000 டாலர்கள் செலவில், ஒரு பெரிய குளிர்பதன இயந்திரத்தையே பீட்டா நிறுவனம் இயக்கி வருகிறது.
* 2011-ம் ஆண்டு மட்டும் சுமார் 96 சதவீதம் வீட்டு விலங்குகளைக் கொன்றிருக்கிறது ‘பீட்டா’. அதேபோல 2012-ல் 602 நாய்கள், 1,045 பூனைகளைக் கொன்று குவித்திருக்கிறது.
*மொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், சுமார் 30 ஆயிரம் விலங்குகளைக் கொன்றிருக்கிறது ’பீட்டா’.
*இந்த விலங்குகளைப் பற்றிய கணக்கோ, புள்ளிவிவரமோ எந்த ஆவணங்களிலும் தென்படவில்லை. கருணைக் கொலை என்ற பெயரில் அமைதியாகக் கொல்லப்படும் இந்த விலங்குகள், சத்தமின்றி அப்புறப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில், குப்பைகளைக் கட்டுவது போல, பிளாஸ்டிக் பைகளில் மூட்டை கட்டப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.
* இது குறித்து குரலெழுப்பிய சில ஆர்வலர்களிடம், சட்டரீதியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறது பீட்டா .
தமிழகத்தின் மாட்டுப் பால் சந்தை, ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழங்கும் ஒரு பெரும் வர்த்தகம். ஜல்லிக்கட்டு காளைகள்தான் தமிழகத்தை பொறுத்தவரை, இன விருத்திக்கு முக்கியமானவை.
ஜல்லிக்கட்டு என்ற ஒன்றை அழித்து விட்டால், நாட்டு காளைகள் இனம் மங்கி அழியத் தொடங்கி விடும். இதனால் கலப்பின காளைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர முடியும். இதற்காகத்தான் ஜல்லிக்கட்டை இவ்வளவு தீவிரமாக பீட்டா எதிர்ப்பதாக கருத்து நிலவுகிறது. மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருந்து நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து முழுமையான உண்மைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுணர்ந்து உலகறியச் செய்ய வேண்டும்!
தன் கையில் ரத்தத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர் கையை கழுவ முயற்சிக்கிறது பீட்டா!
0 comments:
Post a Comment