விஷால் 2 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருப்பாரா: கேயார் கேள்வி
26 மார்,2017 - 13:43 IST
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கேயார் தலைமையில் ஒரு அணியினரும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் புகுந்து விட்டது, முறைகேடுகள் மலிந்து விட்டது என்பது விஷால் அணியின் குற்றச்சாட்டு, நடிகர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்குள் வரக்கூடாது என்பது மற்ற அணிகளின் குற்றச்சாட்டு இந்த நிலையில் விஷால் 2 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருப்பா£ என்று கேயார் கேள்வி எழுப்பி உள்ளார்.
வதம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை குறிபிட்டார். அவர் மேலும் பேசியதாவது: நடிகராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுவது ஏற்புடையது அல்ல. நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் அவரால் தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது. விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். அவர் பொறுப்புக்கு வந்தால் தன்னை நீக்கியவர்களை பழிவாங்குவார். இதனால் சங்கத்தில் மோதல்தான் நடக்கும். வளர்ச்சி நடக்காது.
நடிகர்கள் எப்போதும் நடிப்பில்தான் கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு பிரச்சினையை பேசித் தீர்க்க நேரம் இருக்காது. தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை விஷாலால் தீர்க்க முடியாது. அவரை யாரோ கொம்பு சீவி விட்டு தேர்தலில் நிறுத்தி உள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2 ஆண்டு பதவி காலம் முடிவது வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அவரால் சொல்ல முடியுமா? எங்கள் அணிக்கு வரவேற்பு உள்ளது. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு கேயார் பேசினார்.
0 comments:
Post a Comment