கடைசி நேரத்தில் சிவகுமாருக்கு கைநழுவிய தேசிய விருது
31 மார்,2017 - 14:26 IST
மார்க்கண்டேயர் சிவகுமார் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர். அவர் நடிப்பில் ஜொலித்த படங்கள் ஏராளம். ரோசாப்பூ ரவிக்கைகாரி, வண்டிச்சக்கரம், அவன் அவள் அது, அக்னி சாட்சி படங்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். ஆனால் அவருக்கு கிடைக்க இருந்த தேசிய விருது சில உள்ளடி வேலைகளால் கையழுவிப்போனது.
1991ம் ஆண்டு வெளிவந்த படம் மறுபக்கம்.
உச்சிவெயில் என்ற தலைப்பில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை கே.எஸ்.சேதுமாதவன் படமாக இயக்கினார். திரைக்கதை வசனத்தை இந்திரா பார்த்தசாரதியே எழுதினார். சிவகுமாருடன் ஜெயபாரதி, ராதா நடித்திருந்தார்கள். எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். டி.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
எந்த தவறும் செய்யாத மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஒருவன் பிற்காலத்தில் தன் தவறுகளை உணர்ந்து முதல் மனைவிடம் பாவமன்னிப்பு கேட்டு நிற்பதாக கதை. சிவகுமாரின் முதல் மனைவியாக ஜெயபாரதியும், இரண்டாவது மனைவியாக ராதாவும் நடித்திருந்தார்கள். இந்தபடம் அந்த ஆண்டு இந்தியாவில் வெளிவந்த படங்களிலேயே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு தங்கத்தாமரை விருதை பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான விருது இயக்குனர் சேதுமாதவனுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது ஜெயபாரதிக்கு கிடைத்து.
அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது பட்டியலில் சிவகுமார் முதல் இடத்தில் இருந்தார். முதல் நாள் இரவு வரை சிவகுமாருக்குத்தான் தேசிய விருது என்ற செய்திகள் பரவியிருந்தது. ஆனால் மறுநாள் காலை அக்னிபாத் படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு அதேசிய விருது அறிவிக்கப்பட்டது. தேர்வுகுழுவில் அதிக அளவில் இடம்பெற்றிருந்த வடநாட்டுக்காரர்கள். தென்னாட்டுக்காரான அதுவும் குறிப்பாக தமிழரான சிவகுமாரை புறந்தள்ளிவிட்டனர்.
0 comments:
Post a Comment