Thursday, March 30, 2017

சென்னையில், நாளை நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

நடிகர் சங்க தேர்தலின் போது போட்டியிட்ட விஷால் தலைமையிலான அணியினர், ‘நாங்கள் வெற்றி பெற்றால் தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம்’ என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்கள். தனியார் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தம் திரும்ப பெறப்பட்டது. நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர் சங்கம் சார்பிலேயே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. நிலம் மீட்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந்தேதி புதிய கட்டிடத்துக்கான பூஜை நடத்தப்பட்டது. இதில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய கட்டிடத்தை ரூ.26 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 4 மாடிகளை கொண்டது. இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி மையம், நடன அரங்கம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள், சங்க அலுவலகம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. துணைத் தலைவர் பொன்வண்ணன், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் நிர்வாகிகள் சங்க கட்டிட அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

இதில் நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவை நாளை (31-ந்தேதி) நடத்துவது, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், திரைப்பட துறையினர் அனைவரையும் இதற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதுதவிர தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்பட திரை உலகத்தை சேர்ந்த 24 அமைப்புகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான அழைப்பிதழை விஷால் நேரில் சென்று வழங்கினார்.

நாளை காலை 9 மணிக்கு சங்க வளாகத்தில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.

விஷால், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். ரஜினி, கமல் இருவரும் முதல் செங்கலை எடுத்து வைத்து கட்டிட பணியை தொடங்கி வைக்கிறார்கள்.

மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை அறங்காவலர் குழு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகக்குழு, செயற்குழு, நியமனக்குழு, கட்டிட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment