தென்னிந்திய நடிகர் சங்கம் அடிக்கல் நாட்டு விழா : முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு
31 மார்,2017 - 09:56 IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று(மார்ச் 31-ம் தேதி) சிறப்பாக நடந்தது. தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சங்கங்கள் உள்ளன, இதில் முக்கியமானது தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த சங்கத்திற்கு என்று தனியாக கட்டடம் எதுவும் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகத்தின் பொறுப்புக்கு வந்து நடிகர் சங்கம் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.
அதன்படி, தி.நகர், ஹபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர் அங்கு கட்டடம் கட்ட உரிய அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து இன்று நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை ஆரம்பமானது. நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி தொடந்து நடைபெற்றது. நடிகர் சங்க கட்டடத்திற்கான முதல் கல்லை விஷால் மற்றும் நாசர் ஆகியோர் எடுத்து வைத்தனர். தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற பிற நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் ஆகியோரும் எடுத்து வைத்து வைத்தனர்.
முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு : இந்த விழாவில் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும், கலந்து கொள்ளும் அனைவரும் கட்டடத்திற்கான ஒரு செங்கலை எடுத்து வைக்க வேண்டும் என்று நாசர், விஷால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். ரஜினி, கமல் இருவரும் தான் சங்கத்திற்கான பூமி பூஜையில் முதல் கல்லை எடுத்து வைப்பார்கள் என்று நடிகர் சங்கம் கூறியிருந்தது. ஆனால் ரஜினி, கமல் இருவருமே பங்கேற்கவில்லை. கமல் லண்டன் சென்றுள்ளதால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. ரஜினி, டில்லி செல்வதாக கூறப்படுகிறது. அதனால் அவரும் பங்கேற்கவில்லை. இருந்தாலும் ரஜினி 12 மணியளவிலும், கமல் 1 மணியளவிலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்றே தமிழ் சினிமாவின் மற்ற முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்கவில்லை. இதேப்போன்று பல முன்னணி நடிகைகளும் இந்த விழாவினை புறக்கணித்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம், சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.
0 comments:
Post a Comment