அவசர அழைப்பு : 2-ம் தேதி ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி
29 மார்,2017 - 12:47 IST
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசி நெடுங்காலமாகிவிட்டது. ரசிகர்கள் தன்னை அரசியலுக்கு வர வற்புறுத்துவதும், மன்றத்து கொடிகளுடன் உள்ளூர் தேர்தல்களில் யாரையாவது ஆதரித்து வாக்கு கேட்பதும் ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால் அதனை தவிர்த்து வந்தார். ஒவ்வொரு படம் வெளிவரும் நேரத்தில் ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வார். அதனையும் நிறுத்தி விட்டார். தன் மகள் திருமணத்தையொட்டி மிகப்பெரிய விருந்து வைக்க முடிவு செய்திருந்தார். அதையும் செய்யவில்லை.
இந்த நிலையில் வருகிற 2ந் தேதி ரஜினி தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துள்ளார். அன்று காலை 9 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் அவர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார். இதற்கான அழைப்பு கடிதம் நேற்று மன்ற நிர்வாகிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக ரஜினியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. மரியாதை நிமித்தமாக தன்னை சந்தித்து விட்டு ரஜினி என்னை ஆதரிக்கிறார் என்று வெளியில் சொல்லிக் கொண்டிருந்த கங்கை அமரனை போனில் அழைத்து கண்டித்ததுடன் யாருக்கும் நான் ஆதரவு தரவில்லை என்று அறிவித்தார். மோடி ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தபோது அதனை மற்றவர்கள் எதிர்த்துக் கொண்டிருந்தபோது துணிச்சலுடன் வரவேற்றார்.
லைகா நிறுவனத்தின் நிகழ்ச்சிக்கு இலங்கை செல்வதை இங்குள்ள அரசியல் கட்சிகள் தடுத்த போது. "நீங்கள் தடுப்பதற்கான காரணத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் உங்கள் அன்புக்கு கட்டுப்பட்டு என் பயணத்தை ரத்து செய்கிறேன். இனி வரும் காலத்தில் புனித போர் நடந்த மண்ணை தரிசிக்கவும், புனித போராளிகள் சுவாசித்த காற்றை சுவாசிக்கவும் வாய்ப்பு கிடைத்தால் தடுக்காதீர்கள்" என்று மிக நாகரீகமாக அதே சமயம் சற்ற கடினமாகவே சொன்னார் ரஜினி. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவர் தனது ரசிகர்களை அவசரமாக அழைத்துள்ளார். இது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment