Tuesday, March 28, 2017

நாலு ஆறு அஞ்சு – திரை விமர்சனம்

நாயகன் கார்த்திக் ராஜ் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இதே மருத்துவமனையில் மனோபாலாவும் பணியாற்றி வருகிறார். நாயகனுடன் பணியாற்றும் பெண் டாக்டர் நாயகனை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், நாயகனோ வேறொரு பெண்ணை காதலிக்கிறார். இருந்தும் அந்த பெண், கார்த்திக்கையே காதலித்து வருகிறாள்.

ஒருகட்டத்தில், அந்த பெண்ணும், மனோபாலாவும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதையடுத்து, நாயகனுக்கு வேறொரு பிரச்சினை வருகிறது.

அதாவது, இவரது கையை விட்டு சென்ற பரம்பரை வீடு ஒன்று இன்னும் ஒரு வாரத்திற்குள் அவன் கைக்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதனால், நாயகனும், இவர்கூடவே தங்கியிருக்கும் உறவுக்கார பையனும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், நாயகனுக்கு அடிக்கடி ஒரு பெண்ணின் உருவம் அவருக்கு தெரிகிறது. கடைசியில், அந்த பெண்ணே தனது மனைவியாகவும் வரவே, ஆழ்ந்த குழப்பத்திற்கு போகிறார் நாயகன். இதனால், இவர் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டார் என்று அவரது உறவுக்கார பையன் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்கிறார்.

இறுதியில், நாயகனுக்கு என்னதான் ஆனது? இவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்த அந்த பெண் யார்? நாயகனின் பரம்பரை வீடு இவர் வசம் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கார்த்திக் ராஜ் தான் படம் முழுக்க வருகிறார். இவருக்குத்தான் நடிப்பதற்குண்டான வாய்ப்புகளும் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

இருந்தாலும், ஒருசில காட்சிகளில் இவரது கதாபாத்திரம் நம்மையும் குழப்பிவிடுகிறது. இதனால், அந்த ஒரு சில காட்சிகள் மட்டும் இவரது கதாபாத்திரத்தை ரசிக்க முடியாமல் போகிறது.

நாயகனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண் உருவமாக நடித்திருக்கும் நிரஞ்சனா, அவ்வப்போது வந்து போயிருக்கிறார் என்றாலும், அவருக்கு படத்தில் போதுமான வேலை கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இதனால், அவரிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. உறவுக்கார பையனாக வரும் இளைஞரின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் நமக்கு தெரிந்த முகம் மனோபாலா மட்டும்தான். அவரும் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்துபோயிருப்பதால் பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

இயக்குனர் சாய் சத்யம், சாதாரண ஒரு கதையை கையில் எடுத்து, அதன்பின்னணியில், திரில்லர், வன்மம் ஆகியவற்றை புகுத்தி ஒரு படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது, அனைவருக்கும் இது ஒரு பேய் படம் என்பதுபோல் தோன்றும். ஆனால், பேய் போல் ஒரு பெண்ணை நடமாட்டவிட்டு பேயையே ஏமாற்றி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதை அழகாக அமையாதது படத்திற்கு பெரிய தொய்வு.

பிலிப் ஆர் சுந்தரின் ஒளிப்பதிவில் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நகர்கிறது. அதனால், காட்சிகளில் தெளிவில்லாமல் இருக்கிறது. இருப்பினும், ஒரு சில காட்சிகள் பாராட்டும்படி இருக்கிறது. ஜியோப் பாட்டர்சன் மற்றும் சஷாங் ரவிச்சந்திரன் ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் திகிலூட்டவில்லை.

மொத்தத்தில் ‘465’ சுவாரஸ்யம் இல்லை.

0 comments:

Post a Comment