நெல்லை சங்கீதசபாவில் நேற்று மாலை “மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்“ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கினார். திருநங்கைகள் கங்கா நாயக், சீமாநாயக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி ஆனந்தன் வரவேற்று பேசினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், டாக்டர் அன்புராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
எனது தாய் தான் எனக்கு முதல் நண்பர், அவரின் வழிகாட்டுதலின் பேரில் திருநங்கைகளுக்காக காஞ்சனா படத்தில் நடித்தேன். திருநங்கைகளாக பிறப்பது சாபம் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. அவர்களும் நம்மை போன்றவர்கள் தான். ஒரு திருநங்கையை மற்றொரு திருநங்கை தத்து எடுப்பது பாராட்டுக்குரியதாகும்.
திருநங்கைகள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல, அஷ்ட லட்சுமிகள். டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் குழந்தை பிறந்தோலோ, வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்தாலோ, எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி என்றாலும் இவர்களை அழைத்து தான் விளக்கு ஏற்றி வைக்க சொல்வார்கள். அந்த நிலை தமிழகத்திற்கு வரவேண்டும்.
இனி நான் நடிக்கும் படங்களின் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமித்து திருநங்கைகளுக்காக வங்கி கணக்கு தொடங்கி சேமித்த பணத்தை போட்டு வைப்பேன். அந்த பணத்தை திருநங்கைகளின் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்துவேன்.
திருநங்கைகளுக்கு ஒரு கட்டிடம் கட்டிக்கொடுப்பேன். திருநங்கைகளுக்காக மீண்டும் படம் எடுப்பேன். அவர்களை மக்கள் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கும் வரை போராட்டம் நடத்துவேன்.
தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளேன். இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு மாடுகள் வாங்க ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருநங்கைகளின் நடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நடிகர் ராகவா லாரன்சும், திருநங்கைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். சுத்தமல்லியை சேர்ந்த திருநங்கை ரேணுகா, மிஸ் திருநெல்வேலியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment