பிரபல நடிகை பாவனா ‘ஹனிபீ-2’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு வீடு திரும்பியபோது காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் காரணமாக நடிகை பாவனா முதலில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அதன்பிறகு அதிலிருந்து அவர் மீண்டு தனது இயல்பு நிலைக்கு மாறினார். இதை தொடர்ந்து அவர் ‘ஹனிபீ-2’ படத்தில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். மேலும் தனது காதலரும் கன்னட சினிமா தயாரிப்பாளருமான நவீனுடன் நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
இதற்கிடையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ‘ஹனிபீ-2’ படம் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று உள்ளது. இதுபற்றி நடிகை பாவனா ஒரு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எனது வாழ்க்கை எதையெல்லாம் தரப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன். மன நிம்மதியாகவும் உள்ளேன். எனது புதிய படமான ‘ஹனிபீ-2’-க்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவு எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் திருமணத்திற்கு முன்பு 2 மலையாள படங்கள் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து கொடுத்துவிடுவேன்.
எனது திருமண ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. எங்கள் இருவீட்டாரின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்து இந்த ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் எங்கள் திருமணம் நடைபெறும்.
நிச்சயதார்த்திற்கு நிறைய பேரை அழைக்கவில்லை. ஆனால் திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பேன். திருமணத்திற்கு பிறகு நான் பெங்களூரில் வசிக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment