மம்முட்டி பட சாதனைக்கு குறுக்கே நிற்கும் மோட்டார் வாகன ஸ்ட்ரைக்..!
26 மார்,2017 - 15:09 IST
மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட் பாதர்' படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக மோகன்லாலின் 'புலி முருகன்' படம் நாளுக்கு நாள் பல புதிய சாதனைகளை படைத்தது போல மம்முட்டியின் இந்தப்படமும் ஒரு சில புதிய சாதனைகளையாவது படைக்கும் என்றும், மேலும் மோகன்லாலின் சில சாதனைகளையும் முறியடிக்கும் என்றும் மம்முட்டி ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கேற்றவாறு அறிமுக இயக்குனர் ஹனீப் அதேனி இயக்கத்தில் சினேகா, ஆர்யா, ஷாம், மியா ஜார்ஜ் என முன்னணி நட்சத்திரங்குடன் உருவாகி இருக்கும் இந்தப்படத்தை நடிகர் பிருத்விராஜ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளார்..
மோகன்லாலின் மற்றெந்த ரெக்கார்டுகளை முறியடிக்கிறோமோ இல்லையோ, முதல்நாள் வசூலில் 'புலி முருகன்' வசூலை ஓவர்டேக் செய்யவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இப்போதே அட்வான்ஸ் புக்கிங்கில் தியேட்டர்களை நிரப்பி வருகிறார்கள் மம்முட்டி ரசிகர்கள்.. ஆனால் இப்போது அதற்கு ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.. ஆம்.. சமீபத்தில் மோட்டார் வாகனங்களுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து, வரும் மார்ச்-30ஆம் தேதி கேரளாவில் மோட்டார் வாகன ஸ்ட்ரைக் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ட்ரைக்கால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறையும் என்பதால் நிச்சயம் முதல்நாள் கலெக்சனில் பாதிப்பு வரலாம் என்றும், அதுவே மம்முட்டியின் முதல் நாள் வசூல் சாதனைக்கு தடைக்கல்லாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக மம்முட்டி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
0 comments:
Post a Comment